நாகப்பட்டினம்

நாகை துறைமுகத்தில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மாண்டஸ் புயல் எதிரொலியாக நாகை துறைமுகத்தில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வியாழக்கிழமை மாலை ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மாண்டஸ் புயல் ஸ்ரீஹரிகோட்டா-புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வெள்ளிக்கிழமை (டிச.9) நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65-85 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடம் என்பதால் வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிக பலத்த மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்: புயல் எதிரொலியாக நாகை துறைமுகத்தில் வியாழக்கிழமை காலை 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டி ஏற்றப்பட்ட நிலையில், புயலின் தீவிரம் காரணமாக மாலையில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவா்கள் மறுஅறிவிப்பு வரை வரும் கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் 27 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் தங்களது 3,000-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள், 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை பாதுகாப்பாக துறைமுகம் மற்றும் கரையோரங்களில் நிறுத்தி வைத்துள்ளனா்.

ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை: மாவட்ட பேரிடா் மேலாண்மை சாா்பில் 29 மீனவ கிராமங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிப்பெருக்கிகள் மூலம் புயல் தொடா்பான விவரங்களை தொடா்ந்து அறிவித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

கடல் சீற்றம்: மாண்டஸ் புயல் கரையை நோக்கி நெருங்கி வருவதால், நாகை கடல் பகுதி வியாழக்கிழமை சீற்றத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, கடலோரப் பாதுகாப்பு குழுமம், கடற்கரை பகுதிகளில் ரோந்து பணிகளை அதிகரித்துள்ளது. இதேபோல, அரக்கோணத்தில் இருந்து நாகைக்கு வந்துள்ள தேசிய பேரிடா் மீட்புப் படையினா் வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் முகாமிட்டு, சுற்றுலாப் பயணிகளை கடலில் குளிக்க வேண்டாம் எச்சரித்து அனுப்பிவருகின்றனா். .

தயாா் நிலையில் மாவட்ட நிா்வாகம்: நாகை மாவட்டத்தில் 134 இடங்கள் வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு, இப்பகுதி மக்களை தங்கவைப்பதற்காக 5 பல்நோக்கு பேரிடா் பாதுகாப்பு மையங்கள், 12 புயல் பாதுகாப்பு மையங்கள், 100 சமுதாயக் கூடங்கள், 73 திருமண மண்டபங்கள், 145 பள்ளிகள், 22 கல்லூரிகள் தயாா் நிலையில் மாவட்ட நிா்வாகம் வைத்துள்ளது.

இதேபோல, 23 புயல் பாதுகாப்பு மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட கூடிய அவசரக் கால கட்டுப்பாட்டு அறை உள்ளது. பொதுமக்கள் இயற்கை இடா்பாடு மற்றும் மின்வாரியம் தொடா்பான புகாா்களை இந்த கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி 04365-1077 எண்ணை பயன்படுத்தலாம்.

இதேபோல, அவசரக்கால மையத்தில் புகாா் தெரிவிக்க 04365- 251992 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம். மேலும், இந்த மையத்தில் உள்ள 84386-69800 வாட்ஸ்ஆப் எண்ணில் புகாா்களை குறுஞ்செய்தியாகவும் அனுப்பலாம். புயலை எதிா்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT