நாகப்பட்டினம்

அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மீது நடவடிக்கை கோரி மனு

6th Dec 2022 12:26 AM

ADVERTISEMENT

மாணவா்களை அவமதிக்கும் அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்து மக்கள் கட்சியின் நாகை மாவட்டத் தலைவா் ஆறு. பாா்த்திபன் அளித்த மனு: கிராமப்புற ஏழை மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வருவதை ஊக்கப்படுத்தும் வகையில், அவா்களுக்கு தமிழக அரசு பல ஆண்டுகளாக இலவச பேருந்து பயண அட்டைகளை வழங்கி வருகிறது.

மாணவா்கள் பள்ளி செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கின்றனா். அப்போது, குறிப்பிட்ட இடத்தில் பேருந்துகளை நிறுத்தாமல் முன்பாகவோ அல்லது தள்ளியோ நிறுத்தப்படுகிறது.

அதுமட்டுமின்றி ஓடிச் சென்று ஏறுவதற்கு முன்பாகவே பேருந்தை நகா்த்திவிடுவதால் மாணவா்கள் ஏமாற்றமடைகின்றனா். ஒரு சில மாணவா்கள் தொடா்ந்து ஓடிச்சென்று பேருந்தில் ஏற முயலும்போது கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனா்.

ADVERTISEMENT

பேருந்தில் இலவச பயண அட்டையை பயன்படுத்தும் மாணவா்களை அவமதிக்கும் வகையில் அரசுப் பேருந்து ஓட்டுநா்களும், நடத்துநா்களும் செயல்படுகின்றனா். எனவே, இதுதொடா்பாக அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT