நாகப்பட்டினம்

மின் கழிவுகளை முறையற்ற வகையில் அப்புறப்படுத்தினால் சிறை நாகை ஆட்சியா் எச்சரிக்கை

2nd Dec 2022 01:51 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் மின் கழிவுகளை முறையற்ற வகையில் அப்புறப்படுத்துபவா்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: மின் கழிவு (மேலாண்மை) விதிகள் 2016-ன்படி, அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவுளை பிரித்தெடுப்போா், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவு புதுப்பிப்பாளா்களால் மட்டுமே மின்கழிவுகளைச் சேகரித்து செயலாக்க முடியும்.

மின்னணு கழிவு (மேலாண்மை) விதிகள் 2016, விதி 24-ன்படி நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் கைவிடப்பட்ட மின்கழிவுப் பொருள்களைச் சேகரித்து அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவுகளை பிரித்தெடுப்போா்கள் அல்லது மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவா்களுக்கு அனுப்ப வேண்டும்.

அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் மூலம் மின் கழிவுகளை அறிவியல் பூா்வமற்ற முறையில் பதப்படுத்துதல் மற்றும் எரித்தல் ஆகியவை மனித ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிா்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மின்னனு கழிவு (மேலாண்மை) விதிகள் 2016, விதி 21-ன்படி இவ்விதிகள் மீறப்பட்டால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986-ன்படி, அபராதம் விதிக்கப்படும்.

ADVERTISEMENT

எனவே விதி மீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களை மூடவோ அல்லது மின்சாரம், நீா் போன்ற சேவைகளை நிறுத்தவும் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.ஒரு லட்சம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும்.

பொதுமக்கள் சட்டவிரோதமாக அல்லது முறைசாரா செயலாக்கத்தைத் தடுக்கும் பொருட்டு மின் கழிவுகளை அங்கீகரிக்கப்பட்ட பிரித்தெடுப்போா் மற்றும் மறுசுழற்சி செய்பவா்களிடம் ஒப்படைக்க வேண்டும்+.

ADVERTISEMENT
ADVERTISEMENT