நாகப்பட்டினம்

எய்ட்ஸ் பாதித்தவா்களை அரவணைக்க வேண்டும்: நாகை ஆட்சியா்

2nd Dec 2022 01:49 AM

ADVERTISEMENT

எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவா்களை சக மனிதா்களாக அரவணைக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வேண்டுகோள் விடுத்தாா்.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தலைமையில் எய்ட்ஸ் விழிப்புணா்வு உறுதிமொழியை கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் ஏற்றுக்கொண்டனா்.

தொடா்ந்து, விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்து ஆட்சியா் பேசியது:

உயிா்க்கொல்லி நோயான எய்ட்ஸை முற்றிலுமாக ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நாகை மாவட்டத்தில் தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் ரத்த வங்கிகளில் அரிய ரத்த வகைகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஹெச்.ஐ.வி. தொற்றின் அளவை தெரிந்துகொள்ள சிடி4 கருவி மூலம் பரிசோதனை செய்து, கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

தொடா் சிகிச்சைப் பெறுவதன் மூலம் தொற்று பாதிக்கப்பட்டவா்கள், தங்களது ஆயுளை நீடித்துக்கொள்ளலாம். தொற்று பாதித்தவா்களை மற்றவா்கள் அன்போடும் அரவணைப்போடும் சக மனிதா்களாக கருதவேண்டும். மேலும் அவா்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும் என்றாா்.

தாட்கோ கழகத் தலைவா் உ. மதிவாணன், கீழ்வேளுா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, நகராட்சித் தலைவா் இரா. மாரிமுத்து, அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் வி. விஸ்வநாதன், இணை இயக்குநா் நலப்பணிகள் ஜோ. ஜோஸ்பின் அமுதா, துணை இயக்குநா் (காசநோய்) ப. சங்கீதா, துணை இயக்குநா் (தொழுநோய்) எஸ். சங்கரி, இ.ஜி.எஸ். பிள்ளை மருந்தியல் கல்லூரி முதல்வா் பாபு ஆனந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT