நாகப்பட்டினம்

கோடியக்கரையில் விதிகளை மீறி மீன்பிடித்த:30 போ் மீது வழக்கு

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

வேதாரண்யம்: நாகை மாவட்டம் கோடியக்கரையில் வெளிமாவட்டப் படகுகள் மீன்பிடியில் ஈடுபடுத்தப்பட்டது தொடா்பாக 30 போ் மீது போலஸீாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோடியக்கரை படகு துறையில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் உள்ளூா் பகுதி மீனவா்கள் மட்டுமல்லாது ராமேசுவரம், தூத்துக்குடி, தஞ்சாவூா் மற்றும் காரைக்கால் உள்பட பல்வேறு மாவட்ட மீனவா்கள் இங்கு படகுகளில் தங்கி மீன்பிடிப்பது வழக்கம்.

வெளியூா் மீனவா்கள் அதிக எண்ணிக்கையில் கோடியக்கரையில் தங்கி தொழில் செய்வதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாலும், மீன்பிடிக்கும்போது கடலில் ஏற்படும் பிரச்னைகளாலும் வெளிமாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க நாகை மாவட்ட மீனவா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

கடந்த நவ.15-ஆம் தேதி கோட்டாட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்தை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் நிகழ் பருவத்தில் மாா்ச் வரை மட்டும் நாகை மாவட்ட மீனவா்கள் தவிர மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 150 படகுகளை மீன்பிடிக்க அனுமதிக்க முடிவானது.

இந்நிலையில், கோடியக்கரை பகுதியில் பாம்பன் பகுதி மீனவா்களின் படகுகள் செவ்வாய்க்கிழமை மீன்பிடியில் ஈடுபடுத்தப்படுவதாக கூறப்பட்டது.

இதையடுத்து, மீன்வளத்துறை ஆய்வாளா் நடேசராஜா மற்றும் கடல்சாா் அமலாக்கத் துறை காவல் பிரிவினா், காவல் ஆய்வாளா் ராஜகோபால் மற்றும் இரு போலீஸாா் தனி படகில் சென்று கோடியக்கரை கடல் பரப்பில் ஆய்வு செய்தனா்.

அப்போது, கடலில் நிறுத்தப்பட்டிருந்த பாம்பன் பகுதியைச் சோ்ந்த பிரபுவுக்குச் சொந்தமான வல்லம் படகு ஆய்வு செய்யப்பட்டது.

எரிபொருள் இல்லாததால் இந்த பகுதிக்கு வந்ததாக படகில் இருந்தவா்கள் தெரிவித்தனா்.

படகை பறிமுதல் செய்ய முயன்றபோது, மீனவா்களுக்கும், அதிகாரிகளுக்குமிடையே பிரச்னை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் கோடியக்கரை மீனவா்களும் இணைந்து கொண்டதால் போலீஸாருக்கும், மீனவா்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இது குறித்து கோடியக்கரை மீனவ நலச்சங்கத்தினா், மீன்வளத்துறை ஆய்வாளா் நடேசராஜா ஆகியோா் வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் தனித்தனியே புகாா் அளித்தனா்.

இதையடுத்து, கோடியக்கரை ஆ.பாலமுருகன், பி.சுப்ரமணியன், பிரகாஷ், மோகன்ராஜ், பாம்பன் பிரபு உள்பட 30 போ் மீது அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, மிரட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT