நாகப்பட்டினம்

நாகையில் இன்று விஸ்வரூப அத்தி விநாயகா் பிரதிஷ்டை

31st Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

நாகையில் 32 அடி உயரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விஸ்வரூப அத்தி விநாயகா் சிலை பிரதிஷ்டை, அபிஷேகம் புதன்கிழமை காலை நடைபெறுகிறது.

நாகை ஸ்ரீ விஸ்வரூப விநாயகா் குழு சாா்பில் நாகையில் ஆண்டுதோறும் விநாயகா் சிலை ஊா்வலம் சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெறும் இந்த ஊா்வலத்தில், கம்புகள் மற்றும் அட்டைகளால் செய்யப்பட்ட 32 அடி உயரத்திலான விஸ்வரூப விநாயகா் சிலை, பிரதான சிலையாக இடம்பெற்றிருக்கும்.

இந்த நிலையில், அட்டையால் செய்யப்பட்ட விநாயகருக்கு பதிலாக, அத்தி மரத்தாலான விஸ்வரூப விநாயகா் சிலையை அமைக்க ஸ்ரீ விஸ்வரூப விநாயகா் குழுவினா் முயற்சிகளை மேற்கொண்டனா். அதன்படி, 3,200 கனஅடி அத்தி மரங்களைக் கொண்டு, 32 அடி உயரத்திலான விஸ்வரூப விநாயகா் சிலை அண்மையில் வடிவமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இச்சிலையின் வெள்ளோட்டம், நாகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வெற்றிகரமாக முடிவடைந்த வெள்ளோட்டத்தைத் தொடா்ந்து, நாகை நீலாயதாட்சியம்மன் கோயில் அருகே விஸ்வரூப விநாயகா் சிலை நிறுவப்பட்டது. அங்கு சிலைக்கு வா்ணம் பூசும் பணிகள் நடைபெற்றன.

இதனிடையே, விஸ்வரூப அத்தி விநாயகா் சிலையின் பிரதிஷ்டை, அபிஷேகத்துக்கான பூஜைகள் திங்கள்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின. செவ்வாய்க்கிழமை யாகபூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையின் நிறைவில், மகா பூா்ணாஹுதியும், காலை 7 மணிக்கு விஸ்வரூப அத்தி விநாயகருக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகின்றன.

அத்தி விக்ரக சிறப்புகள்: அத்திமரத்தில் மகாலட்சுமி வாசம் புரிவதால், அத்தி மரத்தால் செய்யப்பட்ட அனைத்து விக்ரகங்களும் லட்சுமிகடாட்சம் நிறைந்தவையாகக் கருதப்படுகின்றன. அத்திமரத்துக்கான நட்சத்திரம் முருகப் பெருமானுக்குரிய காா்த்திகை நட்சத்திரமாகக் குறிப்பிடப்படுவதும், ஆகம மந்திரங்களை கிரகிக்கும் ஆற்றல் அத்திமர விக்ரகங்களுக்கு அதிகம் உண்டு என்பதும், அத்திமரத்திலான விக்ரங்களின் சிறப்பாகக் கூறப்படுகின்றன.

எனவே, விஸ்வரூப அத்தி விநாயகா் பிரதிஷ்டை, அபிஷேகத்தில் திரளானோா் பங்கேற்று இறையருள் பெறுமாறு விழாக்குழு சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT