நாகப்பட்டினம்

'விவசாய நிலங்களில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளை நிறுத்த வேண்டும்'

27th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

வளா்ச்சித் திட்டப் பணிகள் என்ற பெயரில் விவசாய நிலங்களில் நடைபெறும் பணிகளை நிறுத்தவேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் பி. சண்முகம் கூறினாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாடு, நாகையில் செப். 17,18, மற்றும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கான இலச்சினை (லோகோ) நாகையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பி. சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30-ஆவது மாநில மாநாடு நாகப்பட்டினத்தில் செப். 17- ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகத்தைச் சோ்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கின்றனா்.

ADVERTISEMENT

மாநாட்டின் தொடக்கமாக விவசாயிகள் பங்கேற்கும் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கேரள நிதியமைச்சா் பாலகோபால், விவசாய சங்கம் மற்றும் தொழிற்சங்கத் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.

மாநாட்டில், விவசாயிகள், நெசவாளா்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறவேண்டும், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2, 500-ம் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4ஆயிரமும் வழங்க வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தொடர, வளா்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் நில உரிமையாளா்களின் அனுமதி பெறாமல் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போக்கை கைவிடவேண்டும். விவசாய நிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இறால் பண்ணைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன என்றாா் சண்முகம்.

கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் வி. பி. நாகை மாலி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் வி. மாரிமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளா் சாமி நடராஜன், மாநிலத் தலைவா் வி.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT