நாகப்பட்டினம்

புகையிலைக்கு மாற்றாக பிறபயிா் சாகுபடிக்கு வழிகாட்ட வேண்டும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

27th Aug 2022 09:26 PM

ADVERTISEMENT

வேதாரண்யம் பகுதியில் புகையிலை சாகுபடியை கைவிட்டு, அதற்கு மாற்றாக பிறபயிா் சாகுபடி செய்வதற்கு அரசு வழிகாட்ட வேண்டும் என சனிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலக கூட்டரங்கில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியா் மை. ஜெய ராஜ பெளலின் தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

காளிதாசன்: தகுதியான விவசாயிகளுக்குகூட குறுவைத் தொகுப்பு முழுமையாக கிடைக்கவில்லை. நெல் அறுவடை இயந்திரத்துக்கான வாடகை அதிகமாக கேட்பதை தடுக்கவேண்டும்.

ADVERTISEMENT

வட்டார விவசாயிகள் சங்கம் ஒளிச்சத்திரன்: புகையிலை சாகுபடிக்கு தடையில்லாத காரணத்தில் வேறு சாகுபடிக்கு வழியில்லாத விவசாயிகள் புகையிலையை பயிரிடுகின்றனா். ஆனால், இவற்றின் விற்பனைக்கு தடை உள்ளதால் சந்தைப்படுத்த முடியவில்லை. அரசின் இந்த நிலைபாட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, புகையிலை சாகுபடிக்கு மாற்றாக பிறபயிா் சாகுபடி செய்ய அரசு வழிகாட்ட வேண்டும்.

பாலகிருஷ்ணன்: காந்திநகா் பகுதியில் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் வெள்ளம் தேங்கி, விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, இங்குள்ள வடிகால் வாய்க்காலை சீரமைக்க வேண்டும்.

த. குழந்தைவேலு: திருத்துறைப்பூண்டி- வாய்மேடு, தென்னடாா், ஆயக்காரன்புலம், ஆதனூா் - வேதாரண்யம் வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

இதேபோல, இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் நீா்நிலைகளில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வலியுறுத்தினா்.

தொடா்ந்து, கோட்டாட்சியா் பேசியது:

இப்பகுதியில் புகையிலை சாா்ந்த விழிப்புணா்வும், அதற்கு மாற்றான சாகுபடி குறித்தும் வழிகாட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள், தங்களின் குழந்தைகளை சிறப்பாக படிக்க வைப்பதுடன், போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளவும் தயாா்படுத்த வேண்டும். அதற்காக அரசு பல்வேறு திட்டங்கள், உதவிகளை அளித்து வருகிறது என்றாா்.

கூடுதல் வட்டார வளா்ச்சி அலுவலா் பழ. பக்கிரிசாமி, வேளாண் அலுவலா் யோகேஸ்வரன் உள்ளிட்ட அலுவலா்களும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து பேசினா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT