நாகப்பட்டினம்

சம்பா நெல் சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி உரம், விதைகள் வழங்கவேண்டும்

27th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சம்பா நெல் சாகுபடி பருவத்துக்குத் தேவையான விதைகள் மற்றும் உரங்களைத் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், விவசாயிகள் வலிறுத்தினா்.

நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, வேளாண் இணை இயக்குநா் ஜாக்குலா அக்கண்டராவ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் கா.ப. அருளரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

எஸ். சம்பந்தம்: திருத்தப்பட்ட மின்சார மசோதாவை நிறைவேற்றக் கூடாது என விவசாயிகள் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். 2021-22-ஆம் ஆண்டில் நெல் விதைப்புப் பருவத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்.

ADVERTISEMENT

தமிழ்ச்செல்வன்: நாகை மாவட்டத்தில் நெல்களை உலா்த்தவும், கதிா் அடிக்கவும் பயன்படுத்தப்பட்ட களங்கள் தற்போது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதனால், விவசாயிகள் சாலையில் நெல்லை உலா்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள களங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க வேண்டும்.

கோ. சிவஞானம்: நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியா்கள், சுமை தூக்கும் பணியாளா்களுக்கு அரசு கூலி உயா்வு அறிவித்திருப்பதற்கு நன்றி. வருங்காலங்களிலாவது ஒரு மூட்டை நெல்லுக்கு ரூ. 35 அல்லது ரூ. 40 என கொள்முதல் பணியாளா்கள் கையூட்டுப் பெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

முஜிபு ஷரீக்: வேட்டைக்காரனிருப்பு கிராமத்தில் அரிச்சந்திரா ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் உள்ள மணல் திட்டுகளை அகற்ற வேண்டும். வேட்டைக்காரனிருப்பு கிராமத்தில் வேளாண் விரிவாக்க பகுதிநேர மையம் அமைக்க வேண்டும்.

மணியன்: வேதாரண்யம், கரியப்பாட்டினம், வாய்மேடு விரிவாக்க மையங்களில் விதை நெல் மற்றும் உரங்கள் இருப்பை உறுதி செய்ய வேண்டும்.

காவிரி தனபாலன் : தமிழக அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 400 ஊக்கத் தொகை வழங்க வேண்டும். தோ்தல் வாக்குறுதிப்படி நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ. 2,500-ஆக அறிவிக்க வேண்டும்.

வி. சரபோஜி : சம்பா சாகுபடிக்கு தேவையான விதைகள் மற்றும் உரங்களைத் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். பருவமழை தொடங்கும் முன்பு ஆறுகள் மற்றும் வாய்க்கால்களின் சட்ரஸ் பலகைகளைப் பழுது நீக்கம் செய்ய வேண்டும்.

த. பிரபாகரன்: சம்பா நெல் சாகுபடிக்காக வெளிச் சந்தையில் வாங்கப்படும் விதை நெல்லுக்கும் அரசு மானியம் வழங்க வேண்டும். உரத்தட்டுப்பாட்டைப் போக்கி, விவசாயக் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT