நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் பைனான்சியர் வெட்டிக் கொலை: உறவினர்கள் மறியல்

18th Aug 2022 02:34 PM

ADVERTISEMENT

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் பைனான்சியர் வெட்டிக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, குற்றவாளியை உடனடியாக கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் டிவிஆர் மனோகர்.  இவர் அப்பகுதியில் பைனான்சியராகவும், வேளாங்கண்ணியில் தங்கும் விடுதி ஒன்றும் நடத்தி வருகிறார். இவருக்கும் ஒரு சிலருக்கும்  முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதன்கிழமை  டிவிஆர் மனோகர்,  வேளாங்கண்ணி முச்சந்தி அருகே உள்ள அவரது அலுவலகத்தில்  நண்பர் மணிவேலுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 3 பேர்  கடையின் உள்ளே புகுந்து அங்கிருந்த டி.வி.ஆர்.  மனோகரை அரிவாளால்   வெட்டியுள்ளனர்.

இதனைத் தடுத்த மணிவேலுவும் அரிவாளால்  தாக்கப்பட்டார். இதில்,  டிவிஆர் மனோகர்  நிகழ்விடத்திலேயே  உயிரிழந்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், குற்றவாளிகளை உடனடியாக  கைது செய்யக்கோரி மனோகரனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், நாகை கிழக்கு கடற்கரை சாலையில்,  வேளாங்கண்ணியை அடுத்த பரவை அருகே வியாழக்கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுகுமார் தலைமையிலான காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு,  குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய  உறுதி அளித்ததைத் தொடர்ந்து  சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதையொட்டி,   சம்பவ இடத்தில் இரண்டு கலவர தடுப்பு  வாகனம் மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார்  குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT