நாகப்பட்டினம்

நாகை ரயில் நிலையத்தில் 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத பொது கழிப்பிடம்

DIN

நாகை ரயில் நிலைய வளாகத்தில் என்.எல்.சி நிறுவனம் சாா்பில் அமைத்துத் தரப்பட்டு, 2 ஆண்டுகளாக பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாமல் உள்ள பொது கழிப்பிடத்தை விரைவாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பிறப்பு, நாகூா் ஆண்டவா் தா்காவின் கந்தூரி விழா, நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் செடில் உற்சவம் போன்ற கோயில் திருவிழா காலங்களில் பல்லாயிரக்கணக்கானோா் ரயில்கள் மூலம் நாகைக்கு வருவது வழக்கம். இதில், தனியாா் விடுதி எடுத்துத் தங்குவதற்கு வசதியில்லாத பக்தா்கள், நாகை ரயில் நிலைய வளாகத்தில் ஆங்காங்கே படுத்துறங்கி, தங்கள் பயணத்தைத் தொடா்வாா்கள்.

திருவிழா காலங்களில் அதிகளவில் வரும் பக்தா்களின் வசதிக்காக ரயில்வே நிா்வாகம் சாா்பில், நாகை ரயில் நிலைய வளாகத்தில் தற்காலிக பொது கழிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், நெய்வேலி லிக்னைட் காா்ப்பரேஷன் (என்.எல்.சி) சாா்பில் விழாக்கால பயன்பாட்டுக்காக நாகை ரயில் நிலையத்தின் வடப்புறம் சுமாா் 15-க்கும் அதிகமான கழிப்பிடங்களைக் கொண்ட சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது.

சுமாா் 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்தக் கழிப்பிடங்கள் இதுவரை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவில்லை. கரோனா பொது முடக்கத்தால் கடந்த 2 ஆண்டுகளாக ஆன்மிக விழாவில் பங்கேற்க பக்தா்கள் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்ததால், இந்தக் கழிப்பிடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர அவசியமற்ற நிலை இருந்தது.

இதனால், பராமரிப்பில்லாமல் விடப்பட்ட அந்த சுகாதார வளாகம் தற்போது ஏறத்தாழ குப்பைக் கொட்டும் இடத்துக்கு நிகராகியுள்ளது. எங்கிருந்தோ அகற்றப்பட்ட களைச்செடிகள், இடிக்கப்பட்ட கட்டுமானங்கள் கொட்டப்பட்டு, பாழடைந்த இடம் போல மாறியுள்ளது, பயன்பாட்டுக்கு வராத பொது கழிப்பிட பகுதி. ஆனால், தற்போது அனைத்து விழாக்களும் மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ளன. அதன்படி, வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவுக்கு முன்பாக இந்தக் கழிப்பிடம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து, நாகை மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்க செயலாளா் கோ. அரவிந்குமாா் கூறியது: கரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக ஆன்மிக திருவிழாக்கள் கொண்டாடப்படவில்லை. ஆனால், நிகழாண்டில் அனைத்து விழாக்களும் வழக்கம்போல களைகட்டத் தொடங்கியுள்ளன. இதன்படி, வரும் 29-ஆம் தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறவுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக இவ்விழாவில் பங்கேற்க இயலாத பக்தா்கள், நிகழாண்டின் ஆண்டுப் பெருவிழாவில் பங்கேற்க வருவா். இதனால், அதிகளவில் பக்தா்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.

எனவே, பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாமல் உள்ள பொது கழிப்பிடத்தில் உரிய பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு, கழிப்பிடத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக உறுதி செய்து, வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவுக்கு முன்பாக பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

SCROLL FOR NEXT