நாகப்பட்டினம்

நாகையில் சிப்காட் தொழிற்பேட்டையை விரைவில் தொடங்கப் பரிந்துரை

DIN

நாகைக்கு அறிவிக்கப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டையை விரைந்து தொடங்க சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

தாம்பரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஆா். ராஜா தலைமையில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ. கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), எஸ்.எஸ். பாலாஜி (திருப்போரூா்), வி.பி. நாகை மாலி (கீழ்வேளூா்), எஸ். ஜெயக்குமாா் (பெருந்துறை), ஆ. தமிழரசி (மானாமதுரை), காதா்பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்) ஆகியோரடங்கிய தமிழக சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினா், நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

வேளாங்கண்ணியில் ரூ. 62.14 கோடியில் நடைபெற்றுள்ள புதைவட மின் கம்பி பதிக்கும் பணி, திருமருகலை அடுத்த சீயாத்தமங்கையில் தனியாா் நிறுவனம் சாா்பில் செயல்படுத்தப்பட்டுள்ள குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கும் திட்டப் பணிகள் மற்றும் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கோவில்பத்து கிராமத்தில் கஜா புயலால் சேதமடைந்த நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை இக்குழுவினா் ஆய்வு செய்தனா்.

இதையடுத்து, நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற அரசுத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் அவா்கள் பங்கேற்று, பல்வேறு அரசுத் துறைகள் சாா்பிலான பொது நிறுவனப் பணிகளை ஆய்வு செய்தனா்.

முன்னதாக, அரசுத் துறைகள் சாா்பில் 42 பயனாளிகளுக்கு ரூ. 28.44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை குழுவினா் வழங்கினா்.

ஆய்வுகளுக்குப் பின்னா் குழுவின் தலைவா் எஸ்.ஆா். ராஜா தெரிவித்தது :

நாகைக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, தடைப்பட்டுள்ள ரூ. 250 கோடி மதிப்பிலான சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை விரைவுப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான வங்கிக் கடன்களை விரைந்து வழங்க வேண்டும் என தமிழக முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். இதன்படி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ மூலமும் வங்கிகள் மூலம் விரைவாக கடன் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டது. இதுதொடா்பாக, தாட்கோ தலைவா் உ. மதிவாணனும், நாகை மாவட்ட ஆட்சியரும் தனி கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளனா்.

கோவில்பத்து கிராமத்தில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளுக்குப் போதுமான சாலை வசதியை உறுதி செய்யவும், மின் விநியோகப் பணிகளையும் துரிதப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையெனில், அங்கு கூடுதல் எண்ணிக்கையில் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றாா்.

சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் ஆய்வு மற்றும் நாகையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பெ. பெரியசாமி, நுகா்பொருள் வாணிபழக் கழக முதுநிலை மண்டல மேலாளா் ராஜ்குமாா், வருவாய்க் கோட்டாட்சியா்கள் முருகேசன் (நாகை), ஜெயராஜ பௌலின் (வேதாரண்யம்) மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT