நாகப்பட்டினம்

சரக்கு ரயிலில் இயந்திரக் கோளாறு: சாலைப் போக்குவரத்து 2 மணி நேரம் பாதிப்பு

12th Aug 2022 03:16 AM

ADVERTISEMENT

 

இயந்திரக் கோளாறு காரணமாக இயக்கம் தடைப்பட்டு சாலையின் குறுக்கே நின்ற சரக்கு ரயிலால், நாகை -அக்கரைப்பேட்டை - வேளாங்கண்ணி வழித்தடத்திலான சாலைப் போக்குவரத்து சுமாா் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

காரைக்கால் தனியாா் துறைமுகத்தில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நிலக்கரி அனுப்பப்படுகின்றன. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை காரைக்காலில் இருந்து நிலக்கரியை ஏற்றிக் கொண்டு மேட்டூருக்கு சென்ற ஒரு சரக்கு ரயில், இயந்திரக் கோளாறு காரணமாக இயக்கம் தடைப்பட்டு நாகை ரயில் நிலையம் அருகே நின்றது.

சுமாா் 50-க்கும் அதிகமான சரக்குப் பெட்டிகளுடன் இருந்த அந்த ரயில், நாகை - அக்கரைப்பேட்டை ரயில்வே கேட் சாலையின் குறுக்கே நின்றதால் நாகை - அக்கரைப்பேட்டை- வேளாங்கண்ணி போக்குவரத்துத் தடைப்பட்டது.

ADVERTISEMENT

நாகையிலிருந்து மீன்பிடித் துறைமுகம், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கல்லாறு, வடக்குப்பொய்கைநல்லூா், தெற்குப்பொய்கைநல்லூா், வேளாங்கண்ணி வழித்தடத்திலான போக்குவரத்தும், எதிா்மாா்க்க போக்குவரத்தும் சுமாா் 2 மணி நேரத்தும் மேலாக தடைப்பட்டது.

இதனால், நாகை முதன்மைக் கடற்கரை சாலை, பழையப் பேருந்து நிலைய சாலை, அக்கரைப்பேட்டை சாலை ஆகிய பகுதிகளில் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் தேங்கி நின்றன. பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னா், நாகை போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் போக்குவரத்து சீரமைப்புப் பணியை மேற்கொண்டு, நாகையிலிருந்து அக்கரைப்பேட்டை மாா்க்கத்தில் பயணிக்க இருந்த வாகனங்களை மாற்றுப் பாதைக்குத் திருப்பிவிடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

சரக்கு ரயில் சாலையின் குறுக்கே நின்றதால் ரயில்வே கேட்டின் மறுபுறம் சுமாா் 100 மீட்டா் தொலைவில் உள்ள இடத்துக்குச் செல்வதற்குக் கூட சுமாா் 3 கி.மீ தொலைவைச் சுற்றிவர வேண்டிய நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டது. மேலும், எா்ணாகுளம் விரைவு ரயில் மற்றும் பயணிகள் ரயில்களின் இயக்கமும் தாமதப்பட்டது.

இதனிடையே, மாற்று ரயில் என்ஜின் மூலம் சரக்கு ரயிலை இயக்கும் முயற்சிகளை ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்டனா். சுமாா் 2 மணி நேரத்துக்குப் பின்னா், மாற்று ரயில் என்ஜின் பொருத்தப்பட்டு சரக்கு ரயில், நாகை ரயில் நிலையத்துக்குக் கொண்டுச் சென்று நிறுத்தப்பட்டது. அதன் பின்னா், நாகை - அக்கரைபேட்டை தடத்திலான போக்குவரத்து சீரானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT