நாகப்பட்டினம்

பருவமழையை எதிா்கொள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கைசமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

7th Aug 2022 10:54 PM

ADVERTISEMENT

 

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் பருவமழையால் ஏற்படும் வெள்ளப் பெருக்கை எதிா்கொள்ள நீா்நிலைகளை ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரைகளை விரைவாக அகற்ற அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

வேதாரண்யம் பகுதி வழியாக கடலில் கலக்கும் வளவனாறு, முள்ளியாறு, அரிச்சந்திரா நதி, அடப்பாறு, மல்லியனாறு, நல்லாறு, சக்கிலியன் வாய்க்கால் ஆகியன பிரதான வடிகால் ஆறுகளாகும்.

வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் காவிரி படுகையில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை வெளியேற்றுவதில் இந்த வடிகால்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

ADVERTISEMENT

இவற்றிலிருந்து பிரிந்துச் செல்லும் முக்கிய கிளை வடிகால் ஆறுகள், வாய்க்கால்களின் கடலில் இணையும் கழிமுகப் பகுதிகள் போதிய பராமரிப்பின்றி உள்ளது.

குறிப்பாக, திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து வாய்மேடு

- தென்னடாா் வழியாக கடலில் கலக்கும் முள்ளியாற்றில், தாணிக்கோட்டகம் இயக்கு அணைக்கு கீழே வாய்மேடு கழிமுகம் வரை சுமாா் 17 கி.மீ. தொலைவுக்கு ஆகாயத் தாமரைகள் படா்ந்துள்ளன.

இந்த ஆற்றில் தகட்டூா் இயக்கு அணையிலிருந்து பிரிந்து ஆதனூா் கிராமத்தின் வழியே கடலில் கலக்கும் மானங்கொண்டான் ஆற்றில் சுமாா் 15 கி. மீ. தொலைவுக்கு ஆகாயத் தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன.

இதேபோல, மணக்காட்டான் வாய்க்கால், ராஜன்வாய்க்கால், பெரிய வாய்க்கால் என பல வடிகால் வாய்க்கால்களில் வெள்ளநீா் வடிவதையும், பாசனம் பெறுவதையும் தடுக்கும் வகையில் ஆகாயத் தாமரைகள் வளா்ந்துள்ளன. இதனால், வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெரும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மக்கள் இயக்கம்...

பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள நீா்நிலைகளில் வளா்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் பாசனத்துக்கு பெரும் சவாலாகவே உள்ளது. எனவே, பாா்த்தீனியம் களைச்செடிகளை அகற்ற அரசு பெரும் நிதி ஒதுக்கியதைப்போல, ஆகாயத் தாமரைகளை அகற்றவும் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

ஊரக வளா்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்தப் பணியை மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா். ஆனால், நிா்வாகக் காரணங்களால் இந்த யோசனை அனுமதிக்கப்படவில்லை.

இதனால், சுமாா் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த திருவாரூா், நாகை மாவட்டத்தில் நீா்நிலைகளில் வேலிக்காட்டாமனுக்கு செடிகளை அகற்ற மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சி அமைப்புகள், அரசு ஊழியா்கள், விவசாயிகள் இணைந்து மக்கள் இயக்கத்தை உருவாக்கி அதன்மூலம் வேலிக்காட்டாமனுக்குச் செடிகள் ஒழிக்கப்பட்டதுபோல, ஆகாயத் தாமரைகளை அகற்றவும் மக்கள் இயக்கம் தொடங்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, உரிய காலத்தில் இந்தப் பணியை மேற்கொண்டால், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் கடந்த பல ஆண்டுகளாக நோ்ந்து வரும் பாதிப்புகளை நிகழாண்டு தவிா்க்க முடியும் என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT