நாகப்பட்டினம்

பூம்புகாா் அருகேகண்ணகி வீடுபேறு அடைந்த நாள் வழிபாடு

7th Aug 2022 10:55 PM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் அருகேயுள்ள மேலையூரில் கண்ணகி வீடுபேறு அடைந்த நாள் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் பிறந்தவா் கண்ணகி என்று கூறப்படுகிறது. இவா், தனது வாழ்நாளில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியதாக சிலப்பதிகார காவியம் கூறுகிறது. இவருக்கு பூம்புகாா் மேலையூரில் கோயில் உள்ளது. கண்ணகி, ஆடி மாதம் அனுஷ நட்சத்திரத் தினத்தன்று பூம்பல்லக்கில் ஏறி வைகுண்டம் (வைகுண்டபதவி) அடைந்தாா் என்பது ஐதீகம்.

இதையொட்டி, ஆண்டுதோறும் இத்தினத்தில் பூம்புகாா் மேலையூரில் உள்ள கண்ணகி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு கண்ணகி வீடுபேறு அடைந்த நாள் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

கண்ணகி சிலைக்கு பால் மற்றும் வாசனைத் திரவியங்கள் உள்ளிட்டவைகளால் மகா அபிஷேகம் மற்றும் மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. மேலும், காவிரி டெல்டா பகுதி வளம் செழிக்கவேண்டியும் வழிபாடுகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் கண்ணகி கோட்ட காப்பாளா் ராஜசேகரன், புலவா் சோமசுந்தரம், ஸ்ரீனிவாசா மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சத்தியமூா்த்தி, துணைத் தலைமையாசிரியா் ரவி, உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT