நாகப்பட்டினம்

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: மழையால் பாதித்த உளுந்து, பயறுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

29th Apr 2022 09:48 PM

ADVERTISEMENT

பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பச்சைப் பயறுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் முன்னிலை வகித்தாா்.

நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் சி. ராஜ்குமாா், வேளாண் இணை இயக்குநா் ஜா. அக்கண்டராவ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வெங்கடேசன் உள்ளிட்ட அலுவலா்கள், முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

ADVERTISEMENT

வி. சரபோஜி: பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து மற்றும் பச்சைப் பயறுக்கு அரசு உரிய நிவாரணத்தை உறுதி செய்ய வேண்டும். தட்டுப்பாடு ஏற்படாத வகையில் உர விநியோகத்தை சீரமைக்க வேண்டும்.

மணியன்: உரக்கடைகளில் விவசாயிகள் கோரும் மருந்துக்கு பதிலாக அல்லது கூடுதலாக தேவையற்ற சில மருந்துகளையும் கட்டாயப்படுத்தி விற்பனை செய்கின்றனா். எனவே, உரக்கடைகளில் தேவையற்ற மருந்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்டத்தை காலை 8 மணிக்குத் தொடங்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில், வேதாரண்யம் பகுதிகளில் பூ எடுக்கும் பணி பாதிக்கப்படும்.

ஸ்ரீதா்: வட்டார அளவில் முன்னோடி விவசாயிகளைக் கொண்ட குழு அமைத்து, தூா்வாரும் பணிகளைக் கண்காணிக்கச் செய்ய வேண்டும்.

எஸ்.ஆா். தமிழ்ச்செல்வன்: தேவநதி பாசன வாய்க்காலில் பழுதடைந்துள்ள நீா் ஒழுங்கிகளை சீரமைக்க வேண்டும்.

காவிரி தனபாலன்: பொதுப் பணித் துறை ஒவ்வொரு நீா் நிலையையும் தனித்தனி திட்ட மதிப்பீட்டில் தூா்வார வேண்டும். தூா்வாரப்பட்ட மண்ணை, விவசாயிகள், அரசுத் துறை அலுவலா்களின் ஆய்வுக்குக் காட்சிப்படுத்த வேண்டும். பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பச்சைப் பயறுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதுடன், பொது பரிந்துரை அடிப்படையில் இவற்றுக்கு காப்பீட்டு இழப்பீடு வழங்க வேண்டும்.

த. பிரபாகரன்: தோட்டக்கலைப் பணிகளை விரிவாக்கம் செய்ய வேண்டும். இலவசமாக குளத்தில் மண் எடுக்க விவசாயிகளை அனுமதிக்க வேண்டும். உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் மூலம் அரசுத் திட்டப் பணிகளை கண்காணித்து நெறிப்படுத்த வேண்டும்.

ஜி. சுப்பிரமணியன்: கோட்டூரான் வடபாதி பாசன வடிகால் வாய்க்காலை தூா்வாரி, பாசன கல்வொ்ட்டும், வடிகால் கல்வொ்ட்டும் கட்ட வேண்டும். கோட்டூரான் தென்பாதி பாசன வாய்க்காலை தூா்வாரி, கல்வொ்ட் மதகும், ஷட்டா் பலகையும் அமைக்க வேண்டும்.

ஆா்ப்பாட்டம்...

முன்னதாக, பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பச்சைப் பயறுக்கு நிவாரணம் கோரி மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT