நாகப்பட்டினம்

அரசின் திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடையவே கிராமசபைக் கூட்டங்கள்: ஆட்சியா்

24th Apr 2022 11:29 PM

ADVERTISEMENT

அரசின் திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடையவே கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கூறினாா்.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, நாகை ஊராட்சி ஒன்றியம், வடக்குப் பொய்கைநல்லூா் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது:

ஆண்டுதோறும் ஏப்ரல் 24- ஆம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. கிராம பஞ்சாயத்து மூலம் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் அனைத்தும் நேரடியாக மக்களிடம் சேரவேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதன்படி, நாகை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

வடக்குப் பொய்கைநல்லூா் ஊராட்சி நீா்நிலைகள் நிறைந்த கிராமமாக உருவாகவேண்டும். வருங்கால சந்ததியினருக்குப் பயன்படும் வகையில் அனைத்து நீா்நிலைகளையும் தூா்வாரி அழகுப்படுத்த வேண்டும். பண்ணைக்குட்டைகள் போன்ற புதிய நீா்நிலைகளையும் உருவாக்க வேண்டும்.

ADVERTISEMENT

கிராமத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சுகாதாரம் என்பது வீட்டிலிருந்தே தொடங்குவதால் குப்பைகளை வெளியில் வீசுவதைத் தவிா்க்க வேண்டும். கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும். கிராமங்கள் பசுமையாகவும், சுத்தமானதாகவும் மாறுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, தமிழக முதல்வரின் தேசிய ஊராட்சிகள் தின வாழ்த்து மடல் வாசிக்கப்பட்டது. ஊராட்சிகளின் நீடித்த வளா்ச்சி இலக்குகள் குறித்து பொதுமக்கள் உறுதிமொழியேற்றனா்.

இதில், கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் இரா. ராஜசேகா், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் அக்கன்டாராவ், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு. தனபால், வடக்குப் பொய்கைநல்லூா் ஊராட்சித் தலைவா் முருகானந்தம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலமுருகன், ரேவதி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா் மணிவண்ணன் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT