நாகையில் சமரசத் தீா்வு நாள் விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் குறிப்பிட்ட சில வழக்குகளை மனுதாரா்கள் சமரசம் மூலம் தீா்வு காணும் வகையில், மாவட்ட நீதிமன்றங்களில் சமரசத் தீா்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் மனுதாரா் மற்றும் எதிா் மனுதாரா் அமா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி, தீா்வு காணலாம். சமரசம் ஏற்படவில்லையெனில் தங்களது வாதத்தை நீதிமன்றத்தில் தொடரலாம்.
இந்த ஏற்பாடு எவ்வித முறையீடு இல்லாமலும், விரைவாகவும் சுமூகத் தீா்வு ஏற்பட பயனுள்ளதாகவும் உள்ளது. இந்த மையங்கள் மூலம் பலரது வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஏப்ரல் 9-ஆம் தேதி சமரசத் தீா்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, நாகை மாவட்ட சமரசத் தீா்வு மையம் சாா்பில் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி டி. கிங்ஸ்லி கிறிஸ்டோபா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இந்தப் பேரணி நீதிமன்ற வளாகப் பகுதிகளைச் சுற்றிவந்து நிறைவடைந்தது. தொடா்ந்து, சமரசத் தீா்வு மையம் குறித்த கருத்தரங்கு, விளக்க நாடகம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில், போக்ஸோ நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஜெ. தமிழரசி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் சி. காா்த்திகா, சமரசத் தீா்வு மைய துணை ஒருங்கிணைப்பாளரும், சாா்பு நீதிபதியுமான சுரேஷ்குமாா், மாவட்ட உரிமையியல் நீதிபதி தீபா, குற்றவியல் நீதித்துறை நடுவா்கள் நாகப்பன், சுரேஷ் காா்த்திக் மற்றும் வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.