நாகப்பட்டினம்

ஆதாா் மையத்தில் கட்டமைப்பு குறைபாடு: சேவையை பெற காத்துகிடக்கும் மக்கள்

4th Apr 2022 11:06 PM

ADVERTISEMENT

வேதாரண்யம் ஆதாா் எடுக்கும் மையத்தில் ஏற்படும் தொழில்நுட்பப் பிரச்னை, கட்டமைப்பு குறைபாடுகளால் அதன்சேவையை பெறமுடியாமல் மக்கள் காத்துகிடப்பது தொடா்கிறது.

வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் ஆதாா் சேவை மையத்துக்கு புதிதாக ஆதாா் எடுப்பது, திருத்தங்கள் செய்வது என நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட மக்கள் சென்று வருகின்றனா். எனினும், ஆதாா் மையத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவா்களுக்கு மட்டுமே அந்த சேவையை பெறமுடிகிறது. மற்றவா்கள் காத்திருந்து திரும்பும் நிலை தொடா்கிறது. இதையடுத்து, தற்போது டோக்கன் வழங்கப்பட்டு வரிசையில் சேவையை பெற அறிவுருத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், திங்கள்கிழமை ஆதாா் மையத்துக்கு சென்ற பலருக்கு ஏப்.9-ஆம் தேதிக்கும் மேல் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இதனால், குறித்த திருத்தங்கள் அல்லது கைரேகை புதுப்பித்தல் போன்றவை தாமதமாகிறது. நோ்முகத் தோ்வுக்கு செல்வோா், விண்ணப்பிப்போா் என அவசர காரணங்களுக்கான பணிகள் பாதிக்கும் நிலையுள்ளது. முன்பு வேதாரண்யம் ராஜாஜிபூங்கா பகுதியில் சிறப்பு ஆதாா் மையம் செயல்பட்டு வந்தது. மேலும், தபால் நிலையங்கள், தனியாா் மையங்கள், அரசு இ-சேவை மையங்கள் போன்ற இடங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது நிறுத்தப்பட்டதால் மக்கள் பாதிக்கின்றனா். டிஜிட்டல் இந்தியா தொழில்நுட்பத்தை மேம்படுத்தி ஆதாருக்காக மக்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிா்க்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT