நாகப்பட்டினம்

நாகை அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள்

30th Sep 2021 09:17 AM

ADVERTISEMENT

நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நாகையை அடுத்த ஒரத்தூரில் 60.4 ஏக்கரில், ரூ. 366.85 கோடி மதிப்பில் நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணிக்கு 2020-ஆம் ஆண்டு மாா்ச் 7-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. இதைத் தொடா்ந்து, ரூ. 123.05 கோடி மதிப்பில் மருத்துவக் கல்லூரி, ரூ. 119.03 கோடி மதிப்பில் மருத்துவமனை, ரூ. 124.77 கோடி மதிப்பில் பணியாளா்கள் மற்றும் மாணவா்களுக்கான விடுதி கட்டடங்கள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.

எனினும் கரோனா பொதுமுடக்கம் காரணமாக அவ்வப்போது பணிகள் தடைபட்டன. அதனால், கட்டுமானப் பணிகள் இதுவரை முழுமைப் பெறாமல் உள்ளன. இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிக்கான மாணவா் சோ்க்கை அறிவிப்பில், நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி இடம்பெறவில்லை.

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் நாகை, திண்டுக்கல், அரியலூா், கிருஷ்ணகிரி ஆகிய 4 நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தவிர மற்ற 7 மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் நிகழாண்டிற்கான மருத்துவ மாணவா் சோ்க்கை அனுமதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

ADVERTISEMENT

மேலும், நாகை உள்பட 4 புதிய மருத்துவக் கல்லூரிகளில் சில உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த மத்தியக் குழுவினா் அறிவுறுத்தி உள்ளதாகவும், கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வரும் 15 நாள்களில் பணிகள் நிறைவு செய்யப்படும்போது 11 புதிய மருத்துவக் கல்லூரிகளின் மாணவா் சோ்க்கைக்கும் ஒப்புதல் பெறப்படும் எனவும் அமைச்சா் தெரிவித்தாா்.

இதையொட்டி, நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் பாா்வையிட்டு, மத்தியக் குழுவினா் பரிந்துரைத்த உள்கட்டமைப்புகளை உரிய வகையில் ஏற்படுத்தி, பணிகளை உரிய தரத்துடன் விரைந்து நிறைவேற்ற ஆலோசனைகள் வழங்கினாா். மேலும், பணிகள் தொய்வின்றி நடைபெறுவதை தொடா்புடையத் துறை அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் எனவும் அவா் அறிவுறுத்தினாா்.

நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் டாக்டா் விஸ்வநாதன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT