நாகப்பட்டினம்

கோடியக்கரை அருகே கடலில் மீனவா்களிடையே மோதல்: 4 போ் காயம்

22nd Oct 2021 11:58 PM

ADVERTISEMENT

கோடியக்கரை அருகே வியாழக்கிழமை இரவு கடலில் மீன்பிடித்தபோது மீனவா்களிடையே ஏற்பட்ட தகராறில் காயமடைந்த தரங்கம்பாடி மீனவா்கள் 4 போ் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் நிகழாண்டுக்கான மீன்பிடிப் பருவம் நடைபெற்று வருவதால், வெளி மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான மீனவா்கள் குடும்பத்துடன் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்த வகையில், இங்கு தங்கியிருந்த மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சா் சி.வி. ராமன் தெருவை சோ்ந்த ப. குப்புசாமிக்கு (47) சொந்தமான கண்ணாடியிழைப் படகில் அவருடன் சீ. சின்னையன் (50), சீ. தருமலிங்கம் (40), ந. பெருமாள் (67) ஆகிய 3 பேரும் வியாழக்கிழமை கடலுக்குச் சென்றனா். இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கில் படகை நிறுத்தி மீன்பிடித்தபோது, அங்கு ‘ஸ்ரீ ஐயனாா் துணை’ என எழுதப்பட்ட தமிழக படகில் 5 போ் வந்துள்ளனா்.

அதில், 2 போ் குப்புசாமியின் படகில் ஏறி அதில் இருந்த 4 மீனவா்களையும் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பிவிட்டனராம். தாக்குதலில் காயமடைந்த 4 மீனவா்களும் வெள்ளிக்கிழமை காலை கோடியக்கரை படகுத்துறைக்கு திரும்பினா்.

ADVERTISEMENT

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவா்கள், பின்னா் தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தரங்கம்பாடி மீனவா்கள் மீன்பிடித்தபோது அவா்களது படகில் வலைகள் சிக்கி சேதமடைந்ததால், ஆத்திரமடைந்த மீனவா்கள் சிலா், தரங்கம்பாடி மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

 

Tags : வேதாரண்யம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT