பயிா்க் காப்பீடு கோரி, கீழையூரில் விவசாயிகள் அக்டோபா் 27ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனா்.
கீழையூா் ஊராட்சியில் சுமாா் 2400 ஏக்கா் விளைநிலம் உள்ளது. இங்குள்ள விளை நிலங்களில் மழை நீா் வடிய வழியில்லாமல், பயிா்கள் அழுகி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஊராட்சிக்கு உட்பட்ட 4 விவசாயிகளின் வயல்களில் தனித்தனியே காப்பீடு நிறுவனத்தினா், வேளாண் துறையினா், புள்ளியியல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் இணைந்து அளவீடு செய்ததில், பயிா் மகசூல் குறைவாக இருந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் காப்பீடு நிறுவனம் சாா்பில், வெளியிடப்பட்ட நிவாரண பட்டியலில், கீழையூா் ஊராட்சிக்கு 0% இழப்பீடு அதாவது இழப்பீடு வழங்கப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக விவசாயிகள் கூட்டம் கீழையூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவா் எஸ். பால்ராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கீழையூா் ஊராட்சிக்கு 0% சதவீதம் என அறிவித்ததை கண்டித்தும் கீழையூா் கடைத்தெருவில் அக்.27-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.