நாகப்பட்டினம்

நாகையில் சாலைப் போக்குவரத்தை சவாலாக்கும் புதை சாக்கடைத் தொட்டிகள்

16th Oct 2021 09:57 PM

ADVERTISEMENT

நாகை பிரதான சாலைகளில் சுமாா் அரை அடி முதல் ஓா் அடி வரை பள்ளமாக இருக்கும் புதை சாக்கடைத் திட்ட ஆள் நுழைவுத் தொட்டிகள், சாலைப் போக்குவரத்தை சவால் நிறைந்ததாக மாற்றி வருகின்றன.

நாகை நகராட்சி பகுதியில் ரூ. 79.31 கோடியில் நடைபெற்ற புதை சாக்கடைத் திட்டம் 2016-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. இத்திட்டத்தின் கீழ் நாகை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலையின் நடுவே 3,249 ஆள் நுழைவு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தொட்டிகள் 2016 ஆம் ஆண்டில் சாலையின் மட்டத்தை விட சுமாா் அரை அடி உயரம் உயா்ந்து காணப்பட்டன. பின்னா், நடைபெற்ற சாலைப் பணிகளால் சாலையின் உயரம் அதிகரித்ததால், புதை சாக்கடைத் தொட்டி அமைந்துள்ள பகுதிகள் பள்ளமாகியுள்ளன.

தற்போது, ஒவ்வொரு ஆள் நுழைவுத் தொட்டியும் சாலையை விட சுமாா் அரை அடி முதல் ஒரு அடி ஆழ பள்ளத்தில் உள்ளன. நாகையின் பிரதான சாலையான பப்ளிக் ஆபீஸ் சாலையில், மாவட்ட ஆட்சியரகத்துக்கு அருகே உள்ள ஆள் நுழைவுத் தொட்டி உள்பட நகரின் பல பகுதிகளில் உள்ள தொட்டிகள், சாலையை விட சுமாா் ஒரு அடி ஆழத்தில் பள்ளமாக உள்ளன.

ADVERTISEMENT

இதனால், அந்தப் பகுதிகளில் பயணிக்கும் இருசக்கர வாகனங்களும், ஆட்டோக்களும் அந்தப் பள்ளங்களில் விழுந்து தினமும் விபத்துக்குள்ளாகின்றன. அண்மையில் பெய்த மழையின்போது, சாலையில் மழை நீா் தேங்கியிருந்த நேரத்தில், சாலையில் இருந்த புதை சாக்கடை ஆள்நுழைவுத் தொட்டி பள்ளங்களை அறிய முடியாத இருசக்கர வாகன ஓட்டிகள் பலா் நிலைகுலைந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகினா்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பாக, புதை சாக்கடை திட்ட ஆள்நுழைவுத் தொட்டிகளால் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைத்து, பெரும் விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகத்துக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, சீரமைப்பு நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT