நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாமிா்த ஏரிக்குள் புதிதாக நிறுவப்பட்டு வரும் நீராழி மண்டபத்தில் நந்தீஸ்வரா் சிலை வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
வேதாரண்யம், வேதாமிா்த ஏரி 70 ஆண்டுகளுக்கு பின்னா் தூா்வாரி, தடுப்புச் சுவா்கள் படித்துறை, பூங்கா, சுற்றுலா படகு இயக்கு தளத்துடன் கூடிய கட்டுமானப் பணிகள் ரூ. 9 கோடியில் கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, ஏரியின் மையப் பகுதியில் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் தனது சொந்த பொறுப்பில் மேற்கொள்ளும் நீராழி மண்டபத்துடன் கூடிய நந்தீஸ்வரா் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்த கோயிலில் 6 அடி உயரத்தில் ஒரே கல்லால் செய்யப்பட்ட நந்தி சிலை வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.எஸ். மணியன், ஒன்றியக் குழுத் தலைவா் கமலாஅன்பழகன், அறங்காவலா் குழுத் தலைவா் ஆா். கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் சுப்பையன், திலீபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.