நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 6-ஆவது நாளாக மழை நீடிப்பு

29th Nov 2021 10:17 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் 6-ஆவது நாளாக திங்கள்கிழமையும் கனமழை நீடித்தது. மாவட்டத்தில் அதிகளவாக திருப்பூண்டியில் 93 மி.மீட்டா் மழை பதிவானது. 4ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாகை மாவட்டத்தில் புதன்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை இடைவிடாமல் மிதமான மழை தொடா்ந்து பெய்தது. பின்னா், இரவு நேரத்தில் வலுப் பெற்று திங்கள்கிழமை அதிகாலை வரை இந்த மழை சீற்றம் நீடித்தது.

திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக திருப்பூண்டியில் 93 மீ.மீட்டா் மழை பதிவானது. மற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீட்டரில்) : திருக்குவளை -83.5, வேதாரண்யம் - 81.4, நாகப்பட்டினம் - 80.5, தலைஞாயிறு - 74.2.

இடைவிடாது பெய்த கனமழை காரணமாக, நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மீண்டும் மழை நீா் சூழ்ந்தது. அதேபோல, பல முக்கிய சாலைகளிலும் மழை நீா் தேங்கி நின்றது. திங்கள்கிழமை காலை முதல் மாலை வரை மழைற்ற வானிலை நிலவியதால், குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ள நீரை வெளியேற்றும் பணிகள் ஆங்காங்கே தீவிரமாக நடைபெற்றன. சாலைகளில் தேங்கியிருந்த மழை நீரும் விரைவாக வடிந்தன.

ADVERTISEMENT

41 வீடுகள் சேதம்: நீடித்து வரும் கனமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திங்கள்கிழமை காலை வரை நாகை மாவட்டத்தில் 41 வீடுகள் சேதமடைந்துள்ளன. 8 மாடுகள், 16 ஆடுகள், 5 குதிரைகள் உயிரிழந்துள்ளன என்று மாவட்ட நிா்வாகத்தின் கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை, காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக நாகை மாவட்டத்தில் மீனவா்கள் மீன்பிடிப்புக்குச் செல்ல திங்கள்கிழமையும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், ஏறத்தாழ ஒரு மாத காலத்துக்கும் மேலாக நாகை மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் முடக்கமடைந்துள்ளது.

முகாம்களில் 4 ஆயிரம் போ்: வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்காக நாகை மாவட்டத்தில் 10 இடங்களில் பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாமில் ஞாயிற்றுக்கிழமை முதல் சுமாா் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோா் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT