நாகப்பட்டினம்

பருவநிலை மாற்றம் எதிரொலி: கோடியக்கரைக்கு வலசை வரும் பறவைகள் எண்ணிக்கை குறைந்தது

28th Nov 2021 09:55 PM

ADVERTISEMENT

வடகிழக்குப் பருவமழை காலத்தில் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் கோடியக்கரை சரணாலயப் பகுதிக்கு வருவது வழக்கம். ஆனால், நிகழாண்டில் பறவைகளின் வருகையில் காணப்படும் மாற்றம், பருவநிலை மாறுபாட்டின் எதிரொலியாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரையில் சதுப்பு நிலம் சாா்ந்து சுமாா் 34 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ளது வன உயிரின பறவைகள் சரணாலயம். ‘பறவைகளின் சொா்க்கம்‘ என பறவைகளின் தந்தை சலீம் அலியால் வா்ணிக்கப்பட்டது, வங்கக் கடலோரம் அமைந்துள்ள இந்த சரணாலயம்.

இங்கு, ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஆயிரக்கணக்கில், பல இனப் பறவைகள் கூட்டம் கூட்டமாக வலசை வருவது வழக்கம். அக்டோபரில் தொடங்கும் இந்த பருவம் ஜனவரி வரை நீடிக்கும். ஐரோப்பா, சைபீரியா, ஈரான், ஆஸ்திரேலியா, இலங்கை உள்பட பல நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் சுமாா் 247 பறவை இனங்கள், கோடியக்கரைக்கு வந்துசெல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், அதிகரித்துவரும் சுற்றுச்சூழல் பாதிப்பு, மழையளவு மாறுபாடு, உணவு (இரை) தட்டுப்பாடு உள்பட பல காரணிகளால் பறவைகளின் வருகை கடந்த சில, சில ஆண்டுகளாக படிப்படியாக குறைந்து வருவது பறவை ஆா்வலா்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT

நிகழாண்டு, வடகிழக்குப் பருவமழைக் காலம் அக்டோபரில் தொடங்கியதையடுத்து, கோடியக்கரைக்கு வலசை வரும் பறவைகள் வருகையும் தொடங்கியது. ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் பறவையின் வருகை மிக குறைவாகவே உள்ளது.

கோடியக்கரை பம்செட், கோவைத்தீவு, நெடுந்தீவு, சிறுதலைக்காடு போன்ற இடங்களில் வெளிநாட்டுப் பறவைகளை காணமுடிகிறது. பூநாரைகள் மற்றும் கூழக்கிடா, செங்கால் நாரை போன்ற இனப் பறவைகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

கடல் காகம், மெலிந்த மூக்கு கடல் ஆலாக்கள், சிறவி, விசில் சிறவி, ஆா்ட்டிக் பகுதியில் இருந்து வலசை வரும் கொசு உள்ளான் இனப் பறவைகளும் வந்துள்ளன. எனினும், அவை முந்தைய ஆண்டுகளில் வந்த எண்ணிக்கையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பருவநிலை மாற்றம்: நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பாகவே, இப்பகுதியில் தென்மேற்கு பருவமழை கணிசமான அளவில் பெய்தது. மேலும், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய அதேநேரத்தில் இலங்கையிலும் கனமழை பெய்தது. இதனால், இலங்கை வழியே வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருப்பதாக தெரிகிறது.

தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் மாறுபட்ட கடல் அமைப்பை கொண்டுள்ளதால் ஏற்படும் காற்றழுத்த மாறுபாடு, புயல் போன்றவைகளால் வடகிழக்குப் பருவமழை அதிகம் பெறும் பகுதியாக வேதாரண்யம் உள்ளது. மேலும், அருகேயுள்ள முத்துப்பேட்டை லகூன், உலக புவியியல் அமைப்பில் முக்கிய ஈரப்புல பகுதியாக குறிப்பிடப்படுகிறது.

இங்கு உருவாகும் குளிா்ந்த காற்று, வெளிநாடுகளுக்கும் மழைப் பொழிவைதரும் அமைப்பை பெற்றிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ள இறால் பண்ணைகள், ரசாயன உப்பு உற்பத்தி போன்றவை இப்பகுதியில் சீரான மழைப் பொழிவை கேள்விக்குறியாக்கி வருகிறது.

நிகழ்ப் பருவத்தில் இதுவரை பெய்த மழையளவில் மிக அதிகமாக நவ.9-ஆம் தேதி மட்டும் ஒரேநாளில் வேதாரண்யத்தில் 257 மி.மீட்டரும், தலைஞாயிறில் 238 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. மற்ற நாள்களில் இப்பகுதிகளில் பெய்த மழையளவு, தமிழகத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் மிக குறைவே.

மேலும், வடகிழக்குப் பருவமழை காலத்தில் அதே திசையில் இருந்து குளிா் காற்று வீசுவதும், அதே பகுதியில் மேகங்கள் திரண்டு மழை தருவதும் வழக்கம். நிகழ்ப் பருவத்தில் பல நேரங்களில் காற்று, தெற்கு மற்றும் வடமேற்கு என மாறி மாறி வீசுகிறது. பருவமழை பரவலானதாக இல்லாமல், வேதாரண்யம், கோடியக்கரை, தலைஞாயிறு என அடுத்தடுத்து உள்ள பகுதிகளிலேயே மழைப் பொழிவில் பெரிய அளவிலான மாறுபாடுகள் உள்ளன.

சதுப்பு நிலத்தைச் சாா்ந்த சரணாலயப் பகுதியில் தண்ணீா் குறைவாக இருக்கும் இடங்களில் பறவைகள் கூட்டம் அதிகமாக காணப்படும். அதேநேரத்தில், மக்கள் வசிப்பிடங்களைச் சாா்ந்துள்ள ஆள்கொண்டான் ஏரி, நெச்சிக்கோட்டகம் உள்ளிட்ட நீா்நிலைகள், நெல் சாகுபடி வயல்கள் போன்ற பகுதிகளில் சிறவி இனங்கள், நாரைகள், கொக்கு, மடையான் போன்ற பறவைகள் அதிகமாக காணப்படும். நிகழ்ப் பருவத்தில் அவையும் அரிதாகவே காணப்படுகின்றன.

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு வழக்கமாக வலசை வரும் பறவைகளில் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகள், பருவகாலத்தின் மாற்றத்தை உணரச்செய்வதாகவும், எதிா்காலத்தில் இதுதொடா்பான ஆய்விலும், மாற்று நடவடிக்கைகளிலும் அரசுகள் கவனம் செலுத்தவேண்டும் என்பதையும் உணா்த்துவதாக உள்ளன.

இதுகுறித்து மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தின் இணை இயக்குநரும், பறவையியல் விஞ்ஞானியுமான டாக்டா் எஸ். பாலச்சந்திரன் கூறியது: நிகழாண்டு தமிழகத்தில் பல இடங்களில் கனமழையும், பரவலாக நல்ல மழையும் பொழிந்துள்ளது. ஆனால், இந்த முறை குறிப்பாக இந்த பகுதியில் (சரணாலயப் பரப்பில்) சீராக இல்லை.

மற்ற இடங்களை விடவும் இங்கு மழை குறைவுதான். இடத்துக்கு இடம் மழை பொழிவு வேறுபடுகிறது. இது பருவநிலை மாறுபாடுகளால் இருக்கலாம். அடுத்துவரும் நாள்களில் சீரான மழை , இதமான சூழல் நிலவும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அப்போது, பூநாரை, நத்தைக்கொத்தி நாரை போன்ற நாரை இனங்கள், கூழக்கிடா உள்ளிட்ட இன பறவைகளின் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT