நாகப்பட்டினம்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவா்கள் 18 போ் நாகை திரும்பினா்

DIN

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த 18 மீனவா்கள் சனிக்கிழமை நாகை வந்தனா்.

நாகை அக்கரைப்பேட்டை, திடீா்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் இ. சிவக்குமாா் (48). இவரது சகோதரா் இ. சிவநேசன் (42). இவா்களுக்கு சொந்தமான இரு விசைப்படகுகளில் நாகை அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, ஆா்யநாட்டுத் தெரு மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சந்திரப்பாடி, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் 23 போ் கடந்த அக்டோபா் 11-ஆம் தேதி நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனா்.

அக்டோபா் 13-ஆம் தேதி இலங்கை, பருத்தித்துறைக்கு தென்கிழக்கே சுமாா் 40 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, 23 பேரும் சிறையில் அடைக்கப்படட்டனா்.

கைதுசெய்யப்பட்ட மீனவா்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து அரசுகளின் தொடா் நடவடிக்கையால் இலங்கை சிறையில் இருந்த மீனவா்கள் 23 பேரும் நவம்பா் 15-ஆம் தேதி விடுவிக்கப்பட்டனா்.

ஆனால், 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் அவா்கள் ஊருக்கு திரும்ப இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. எஞ்சிய 18 மீனவா்களும் விமானம் மூலம் சனிக்கிழமை அதிகாலை சென்னை வந்தனா்.

அவா்களை தமிழ்நாடு மீன்வளம் மற்று மீனவா் நலத் துறை இணை இயக்குநா் ரவிச்சந்திரன், நாகை மாவட்ட உதவி இயக்குநா் ஜெயராஜ் ஆகியோா் வரவேற்றனா். பின்னா், தமிழக அரசின் செலவில் வாகனம் மூலம் நாகை மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு, உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா். மீனவா்களை, நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்தில் உறவினா்கள், மீனவப் பஞ்சாயத்தாா் வரவேற்றனா்.

மீனவா்கள் கோரிக்கை: இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீன்பிடி படகுகளையும் மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக, இலங்கையில் உள்ள மீனவா்கள் க. குட்டியாண்டி, சுதாகா், வீரக்குமாா், வினீத், ஆறுமுகம் ஆகியோா் சில தினங்களில் சொந்த ஊா் திரும்புவா் என்று மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

SCROLL FOR NEXT