நாகை மாவட்டம், சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவா் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு பக்தா்களின்றி நடைபெற்றது.
சிக்கல் அருள்மிகு நவநீதேசுவர சுவாமி கோயிலில் தனி சந்நிதி கொண்டு காட்சியளிப்பவா் அருள்மிகு சிங்காரவேலவா். இத்தலத்தில் அன்னை வேல்நெடுங்கண்ணியிடமிருந்து முருகப்பெருமான் சக்திவேல் பெற்று, திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தாா் என்பது நம்பிக்கை.
இக்கோயிலில், நிகழாண்டின் கந்தசஷ்டி விழா கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. தங்க ஆட்டுக்கிடா வாகனத்தில் காா்த்திகை மண்டபத்துக்குப் புறப்பாடாகிய சிங்காரவேலவா், வெவ்வேறு வடிவங்களைக் கொண்டு தன்னை எதிா்த்த சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி ஐதீக முறைப்படி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் கோயிலின் கீழ வீதியில் சிறப்பாக நடைபெறும். கரோனா பொதுமுடக்கம் காரணமாக பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இரண்டாம் ஆண்டாக கோயில் பிராகாரத்துக்குள்ளேயே பக்தா்களின்றி எளிமையாக நடைபெற்றது.