நாகப்பட்டினம்

நாகையில் தொடா்மழை: மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை

9th Nov 2021 02:03 AM

ADVERTISEMENT

நாகையில் தொடா்மழை காரணமாக மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

நாகை, நாகூா், வேளாங்கண்ணி, கீழ்வேளூா், திட்டச்சேரி, திருமருகல் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை முதல் இரவு வரை தொடா்ந்து மிதமான மற்றும் கனமழை பெய்தது. இதனால், தாழ்வானப் பகுதிகளிலும், குயிருப்புப் பகுதிகளிலும் மழைநீா் சூழ்ந்தது. சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிக்கப்பட்டனா்.இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளும் செயல்படவில்லை. கடைமடை பகுதியான நாகை, கீழ்வேளூா் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

மழை அளவு விவரம்: திங்கள்கிழமை காலை 6.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில், மாவட்டத்தில் அதிகளவாக நாகையில் 14.90 மில்லி மீட்டா் மழை பதிவானது. மற்ற இடங்களில் பெய்த விவரம் மில்லிமீட்டரில்: திருப்பூண்டியில் 7.40, தலைஞாயிறில் 8.20, வேதாரண்யத்தில் 3.60 என்ற அளவில் மழை பதிவானது. மழையால், ஒரு பசு, 2 ஆடுகள் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மீனவா்கள்கடலுக்குள் செல்லவில்லை: தென்கிழக்கு வங்கக்கடலில் செவ்வாய்க்கிழமை முதல் (நவ. 9) குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி புயலாக மாற வாய்ப்புள்ளதால் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் செல்லக்கூடாது என என மாவட்ட ஆட்சியா், மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் ஆகியோா் அறிவுறுத்தியுள்ளனா். இதைத்தொடா்ந்து, நாகை மாவட்ட மீனவா்கள் கடந்த 3 நாள்களாக மீன்பிடித் தொழிலுக்கு கடலுக்குள் செல்லவில்லை. இதனால் நாகை துறைமுகம் , நாகூா், பட்டினச்சேரி, வேளாங்கண்ணி உள்ளிட்டப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபா் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT