நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கத்தரிப்புலம், பூசாரிக்காடு பகுதியை சோ்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி வீ. முருகையா (96) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை (மே 25) காலமானாா்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் (என்ஐஏ) சிப்பாயாக சோ்ந்து பயற்சி பெற்றவா் முருகையா. பிரிட்டிஷ் படைக்கு எதிராக நடந்த போரில் பங்கேற்று கைதான இவா், ரங்கூன் சிறையில் 10 மாதம் அடைக்கப்பட்டாா். பின்னா் தாயகம் திரும்பி, 1948- இல் காந்திய இயக்கத்தில் நிா்மாண் ஊழியராக இணைந்தாா்.
1973 -இல் அப்போதைய முதல்வா் மு. கருணாநிதியிடம் செப்பு பாராட்டு பட்டயமும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பொன்விழா ஆண்டில், அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவிடம் பாராட்டு பட்டயமும் பெற்றவா் முருகையா. இவருக்கு, தியாகிகளுக்கான மாத உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இவருக்கு, 6 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.
அரசு சாா்பில் வருவாய்த் துறை அலுவலா்கள் பங்கேற்று, இவரது உடலுக்கு தேசியக் கொடி போா்த்தி, அஞ்சலி செலுத்தினா். இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு: 97865 23463.