நாகப்பட்டினம்

மனைவியின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: சடலத்தோடு சாலையில் அமர்ந்து போராட்டம்

16th May 2021 06:11 PM

ADVERTISEMENT

 

திருக்குவளை அருகே இறந்த மனைவியின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது சடலத்தோடு கணவர் சாலையில் அமர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டம் நடத்தியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திருக்குவளை காவல் சரகத்திற்கு உட்பட்ட மடப்புரம் ஊராட்சி கடத்திடள்கரை மாதா கோவில் தெருவில் வசித்து வரும் ரோச்சர்(72) இவரது மனைவி மைதிலி (65) உடல்நிலை குறைவு காரணமாக நேற்று (சனிக்கிழமை) இரவு உயிரிழந்தார்.

தனது மனைவியின் உடலை தனக்கு சொந்தமான புஞ்சை நிலத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த இடத்திற்கு அருகாமையில் மடப்புரம் பிடாரி கோவில் தெருவைச் சேர்ந்த ரெங்கசாமி மகன் குணசேகரன்(54) என்பவர் சாகுபடி செய்துவரும் நாகப்பட்டினம் சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான வயல் உள்ளது. அந்நிலையில் ரோச்சர் தனது மனைவியின் உடலை, அடக்கம் செய்வதற்காக எடுத்து சென்ற போது சம்பவ இடத்திற்கு வந்த குணசேகரன் இந்த இடத்தில் அடக்கம் செய்யக்கூடாது, இது நான் குத்தகைக்கு சாகுபடி செய்யும் வயல் சேர்ந்த இடமென கூறி தடுத்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில், தனது மனைவி உடலோடு கணவர் மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த திருக்குவளை வட்டாச்சியர் எஸ். சிவகுமார் மற்றும் திருக்குவளை காவல் உதவி ஆய்வாளர் பா. பார்த்திபன், ஒன்றிய கவுன்சிலர் டி.செல்வம், ஊராட்சி மன்ற தலைவர்களான மடப்புரம் ராஜலெட்சுமி ரமேஷ், வாழக்கரை எஸ்.ஆர். கலைசெழியன் ஆகியோர் சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதனைத்தொடந்து அளவீடு செய்து நிலம் யாருக்கு சொந்தமானது என முடிவு செய்து கொள்ளலாம் எனவும், தற்பொழுது உடலை ரோச்சர் தனக்கு சொந்தமான புஞ்சை நிலம் என உடலை புதைப்பதற்காக குழி தோண்டிய இடத்திலேயே நல்லடக்கம் செய்தனர்.

மேலும் இறந்தவர்கள் உடலை புதைக்க முடியாமல் சாலையில் சடலத்தை சவப்பெட்டியோடு வைத்து போராடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT