நாகப்பட்டினம்

மீனவர்களின் அடிப்படை பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை: அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்.

19th Jul 2021 03:15 PM

ADVERTISEMENT

மீனவர்களின் அடிப்படை பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாகை மாவட்டம், நாகூர் பட்டினச்சேரி வெட்டாறு முகத்துவாரத்தில் ரூ 19.87 கோடியில் நடைபெறும் கடல் அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணி, நாகூர்சாமந்தான்பேட்டையில் மீன்பிடி இறங்குதளம் அமைத்தல், நாகை நம்பியார் நகரில் நடைபெறும் சிறு மீன்பிடித்துறைமுகம் அமைக்கும் பணி ஆகியவற்றை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து, நாகை அக்கரைப்பேட்டையில் நடைபெற்ற மீனவர்கள் குறை கேட்புக்  கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது மீனவர்களின் கோரிக்கைகளை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ண கேட்டறிந்தார்.  பின்னர் அவர் பேசியது: தமிழக முதல்வரின் தொடர் நடவடிக்கையின் பேரில், கரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் முழுமையாக கடைபிடிக்கவேண்டும்.

மீனவர்களை நேரிடையாகச் சந்தித்து, குறைகளை கேட்டறிந்து, பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மீனவர்களின் குறைகள் கேட்டறியப்பட்டு வருகிறது. கடந்த 2 நாள்களில் கன்னியாக்குமரி, தூத்துக்குடி மற்றும் சென்னை பழவேற்காடு பகுதி மீனவர்களைச் சந்தித்து கோரிக்கைகள் கேட்டறியப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் தொடர்ச்சியாக நாகை மாவட்டத்திலும் இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரபிக் கடலில் உருவான டவ்தே புயல் சீற்றத்தில் சிக்கி மாயமான நாகை மீனவர்களின் வாரிசுதாரர்களுக்கு முதல்வரின் உத்தரவின்பேரில் தலா ரூ. 20 லட்சம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கடலில் இறந்துபோன மீனவர்களின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மாவட்ட ஆட்சியர் மூலம் இது குறித்து உரிய முறையில் கணகெடுப்பு நடத்தப்பட்டு, முதல்வரின் பார்வைக்குக் கொண்டுச்செல்லப்பட்டு நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட  மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம்  வழங்கவேண்டும், டீசல் மானியத்தை உயர்த்தி வழங்கவேண்டும், நாகை மீன்பிடித்துறை முகத்தை விரிவுப்படுத்தவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இவைகள் அனைத்தும் தமிழக முதல்வரின்  கவனத்துக்குச் கொண்டு செல்லப்பட்டு  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழக  அரசு மீனவர்களின் அடிப்படைபிரச்னைக்கு தீர்வு காணும் அரசாகவும், மக்களின் நலன் காக்கும் அரசாகவும் செயல்படும் என்றார்.தொடச்சியாக  நாகை  மீன்பிடித்துறை முகத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 2021-மே மாதத்தில் அரபிக்கடலில் டவ்தே புயல் அலை சீற்றத்தில் சிக்கி கடலில் மாயமான நாகை சமாந்தான்பேட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த  6 மீனவர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ. 20 லட்சம் நிவாரண உதவிகளை அமைச்சர்  அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கி,  ஆறுதல் தெவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் நாகை மாவட்ட ஆட்சியர் ஏ. அருண் தம்புராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள்  ஜெ.முகமது ஷா நவாஸ்( நாகப்பட்டினம்), வி.பி. நாகை மாலி( கீழ்வேளூர்), திமுக  நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் என். கெüதமன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT