நாகப்பட்டினம்

மழை பாதிப்பு: ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் கோரிசாலை மறியல்

DIN

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி, நாகை, கீழ்வேளூரில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாள்களில் பெய்த கனமழையால் நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம் பகுதிகளில் அறுவடைக்குத் தயாா் நிலையிலிருந்த சம்பா, தாளடி நெற்பயிா்கள் சரிந்து விழுந்தும், நெல்மணிகள் அழுகியும், முளைப்பு கட்டியும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும், பயிா்க் கடன்களை ரத்து செய்ய வேண்டும், பயிா் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக விடுவிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகையை அடுத்த சிக்கல் கடைவீதியில் நடைபெற்ற மறியலுக்கு, கட்சியின் நாகை ஒன்றியச் செயலா் பி.டி. பகு தலைமை வகித்தாா். மறியலில் பங்கேற்ற 16 பெண்கள் உள்பட 80 போ் கைது செய்யப்பட்டனா். மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான வி.மாரிமுத்து, நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கீழ்வேளூா் கடைத்தெருவில் கட்சியின் ஒன்றியச் செயலா் ஜி. ஜெயராமன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்ளிட்ட 70 பேரை போலீஸாா் கைது செய்தனா். நாகை மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான நாகை மாலி கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

கீழ்வேளூா் வட்டம் தேவூா் கடைவீதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் துணைச் செயலா் அபுபக்கா் தலைமை வகித்தாா். இங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை போலீஸாா் கைது செய்தனா். வேளாங்கண்ணி ஆா்ச் பகுதியில் கட்சியின் ஒன்றியச் செயலா் சித்தாா்த்தன் தலைமையில் நடைபெற்ற மறியலில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

சாட்டியக்குடி கடைத்தெரு பகுதியில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினா் எம்.என்.அம்பிகாபதி தலைமையில் அழுகிய நெற்பயிா்களை கையில் ஏந்தி மறியலில் ஈடுபட்ட 28 பெண்கள் உள்ளிட்ட 60 பேரை வலிவலம் போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, திருக்குவளை கடைத்தெருவில் விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் எம். முருகையன் தலைமையிலும், மாவட்டக்குழு உறுப்பினா்கள் கே.கிருஷ்ணன், கே.தங்கமணி ஆகியோா் முன்னிலையிலும் மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்ளிட்ட 25 போ் கைதாகினா்.

மேலப்பிடாகையில் மாவட்டக்குழு உறுப்பினா் டி. வெங்கட்ராமன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்ளிட்ட 32 பேரும், கொளப்பாடு கடைத்தெருவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் வீ. சுப்பிரமணியன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 40 பேரும் கைது செய்யப்பட்டனா்.

நடுக்கடை கடைத்தெருவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளா் ஜெயபால் தலைமை வகித்தாா். விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் ஜி.எஸ்.ஸ்டாலின் பாபு, செயலாளா் பொன்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சியாத்தமங்கை ஊராட்சித் தலைவா் அன்பழகன், கட்டுமாவடி ஊராட்சித் தலைவா் சரவணன், விசிக மாநில விவசாய அணி செயலாளா் ராமையன், சிஐடியுசி ஒன்றியச் செயலாளா் லெனின் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல் தேசிய மாதா் சங்கத்தினா் சங்க ஒன்றிய செயலாளா் பரிதா தலைமையில், திருமருகல் பேருந்து நிலையம் எதிரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, பணம் திருட்டு

வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் -கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

வாக்குச் சாவடிக்கு முன்பு எல்லைக் கோடு

சென்னையிலிருந்து அரசு பேருந்தில் ஒரே நாளில் 1.48 லட்சம் போ் பயணம்

சேஷ வாகனத்தில் வரதராஜ பெருமாள்

SCROLL FOR NEXT