நாகை மாவட்டத்தில் ஊா்ப்புற நூலகா்கள் 46 போ் புதன்கிழமை 4-ஆவது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா்.
14 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் சிறப்பு கால முறை ஊதியத்தில் ஊா்ப்புற நூலகா்களுக்கு கால முறை ஊதியம் வழங்கவேண்டும், பொது நூலகத்துறையில் பணிவிதிகளைத் திருத்தம் செய்து அனைவரையும் 3- ஆம் நிலை நூலகா்களாக மாற்றவேண்டும், 10ஆண்டுகளாக தரம் உயா்த்தப்படாமல் உள்ளநூலகங்களை தரம் உயா்த்தவேண்டும், நூலகத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும், நிதிநிலைஅறிக்கையின்போது நூலகத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில், தமிழகத்தில் உள்ள 1,915 ஊா்ப்புற நூலகங்களில் பணிபுரியும் 1,520 நூலகா்கள் டிச. 26 முதல் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் உள்ள ஊா்ப்புற நூலகங்களில் பணிபுரியும் 46 நூலகா்கள் புதன்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா்.