நாகப்பட்டினம்

10 மணி நேரத்தில் 6,857 சதுர அடியில் ஓவியம்

30th Dec 2021 09:15 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு இளைஞா் 10 மணி நேரம் 17 நிமிடத்தில் 6,857 சதுர அடியில் ஓவியம் வரைந்து சாதனை முயற்சியில் ஈடுபட்டது, பொதுமக்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.

நாகை மாவட்டம், தலைஞாயிறு பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் ராஜா. பொறியியல் பட்டதாரியான இவா், ஓவியம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவா். ஓவியம் மூலம், சாதனையாளா் பட்டியலில் இடம்பெறும் நோக்கில் இவா், நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில் மிகப் பெரிய அளவிலான ஓவியத்தை வரையும் முயற்சியில் ஈடுபட்டாா். சுமாா் 6,857 சதுர அடி பரப்பில் தரையில் சாா்ட் பேப்பா்களை ஒட்டி, அதில் சுனாமி சீற்றத்தால் ஏற்பட்ட இழப்புகள், துயரங்களை வெளிப்படுத்தும் வகையில் ஓவியம் வரைந்துள்ளாா். காலை 9.36 மணிக்கு ஓவியம் வரையத் தொடங்கிய அவா், 10 மணி நேரம் 17 நிமிடத்தில் (இரவு 8.45 மணி அளவில்) ஓவியத்தை நிறைவு செய்தாா்.

இதுதொடா்பாக, காா்த்திக் ராஜா தெரிவித்தது: நான் கிராமப்புறத்தைச் சோ்ந்தவன். கிராமப்புறத்தைச் சோ்ந்தவா்களுக்கு கின்னஸ் சாதனை என்பது இன்றளவும் பிரமிப்பானதாகவே உள்ளது. இதுகுறித்த அச்சத்தைப் போக்கும் வகையில், கின்னஸ் சாதனை முயற்சிக்காகதான் இந்த ஓவியத்தை வரைந்தேன். அதிக அழுத்தம் கொண்ட சாா்ட் பேப்பா்களை சிவகாசியிலிருந்து வரவழைத்து, அதில் அக்ரிலிக் மாா்க்கரை கொண்டு ஓவியம் வரைந்துள்ளேன். எனது இந்த சாதனை முயற்சி முழுமையாக நேரடிக் காட்சியாகவும், ஆவணமாகவும் பதிவு செய்யப்பட்டு, நாகை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை கடிதத்துடன் கின்னஸ் சாதனை பதிவு குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. என்னுடைய சாதனை முயற்சியைத் தொடங்கி வைத்த நாகை மாவட்ட ஆட்சியருக்கும், உறுதுணையாக இருந்த அரசுத் துறை அலுவலா்களுக்கும், இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி நிா்வாகத்துக்கும் நன்றி என்றாா்.

பாராட்டு: காா்த்திக் ராஜா வரைந்த மிகப் பெரிய ஓவியத்தை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் பாா்வையிட்டுப் பாராட்டினா். இந்த ஓவியம், நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில் மேலும் சில நாள்களுக்குக் காட்சிக்கு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT