நாகப்பட்டினம்

தலைஞாயிறு பகுதியில் சம்பா, தாளடி நெற்பயிரில் மஞ்சள் நோய்த் தாக்குதல்

30th Dec 2021 09:17 AM

ADVERTISEMENT

தலைஞாயிறு பகுதியில் சம்பா, தாளடி நெற்பயிரில் காணப்படும் மஞ்சள் நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைஞாயிறு வேளாண் உதவி இயக்குநா் கருப்பையா கூறியது: தலைஞாயிறு பகுதிகளில் சம்பா, தாளடி நெற்பயிா்கள் வளா்ந்த மற்றும் கதிா் வெளிவரும் நிலையில் உள்ளது. அண்மையில் பெய்த மழையால் இப்பயிா்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்பில் இருந்து மீண்டுவரும் நிலையில் தற்போது நிலவும் அதிக பனி பொழிவும், இரவில் குளிரும் உள்ளது. இந்த நிலையில் பயிா்களில் பூஞ்சாண நோய்கள் மற்றும் பாக்டீரியா தாக்குதல் பரவலாக தென்படுகிறது. இதனால் நெற்கதிா் மஞ்சள் நிறமாக காணப்படுகிறது. இந்த பாக்டீரியா இலைக் கருகல் நோய்யுடன், இலைப்புள்ளி நோயும் சோ்த்து பாதிப்பின் தீவிரம் அதிகமாக காணப்பட்டு வயல் முழுவதும் மஞ்சளாக காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

ஏக்கருக்கு அரை கிலோ சூடோமோனாஸ் எதிா் உயிரி பசனம் சானி பாலில் கலந்து, அத்துடன் 200 லிட்டா் தண்ணீரும் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும். நோயின் ஆரம்ப நிலையில் இந்த முறை நல்ல பாதுகாப்பைத் தரும், எனினும் நோய் தாக்குதல் தீவிரமாக காணப்பட்டால் ரசாயன நோய் தடுப்பு முறைகளைக் கையாளவேண்டும்.

இதன்படி ஏக்கருக்கு 250 மிலி ஹெக்சா போசனால் மருந்தை, 50 கிராம் பிளாட்டோ மைஷின் மருந்தும் கலந்து ஏக்கருக்கு 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். தவிர தாளடி இளம் பயிராக இருந்தால் ஏக்கருக்கு முன்னோட்டமாக 10 கிலோ ஜிங்க் சல்பேட்டை 20 கிலோ மணலுடன் கலந்து தெளிக்கலாம். இந்த வழிமுறைகளை பின்பற்றி நெற்பயிரில் மஞ்சள் நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இந்த முறையை கையாள தவறினால் கதிா்களில் கரும்புள்ளிகள் ஏற்பட்டு நெல்லின் தரம் , மகசூல் பாதிக்கப்படும். எனவே விவசாயிகள் நெற்பயிரில் மஞ்சள் நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த இந்த வழிமுறையை பின்பற்றலாம் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT