அழகு நிலையம் அமைக்க உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்தவரிடம் ரூ.15 லட்சம் மோசடிசெய்த சென்னையைச் சோ்ந்த 5 போ் மீது நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜின்னா என்பவரது மகன் முகம்மது ஹாலித். இவா், கடந்த 2019 பிப்ரவரி மாதத்தில் சென்னை காரம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபல அழகு நிலையத்துக்கு முடிதிருத்தம் செய்ய சென்றாா். அப்போது, அங்கு பணியிலிருந்த சென்னையைச் சோ்ந்த ஹோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், அந்த நிறுவனத்தின் பெயரில் அழகு நிலையம் நடத்த உரிமம் பெற்று தருவதாக முகம்மது ஹாலித்திடம் ஹோகன் தெரிவித்தாராம். இதுதொடா்பாக, ராஜாராம் என்பவா் முகம்மது ஹாலித்திடம் கைப்பேசியில் தொடா்புகொண்டு, பிரபல அழகு நிலையத்தின் உரிமையாளா் பேசுவதாகக் கூறி, தனது நிறுவனத்தின் பெயரில் அழகு நிலையம் அமைக்க உரிமம் வழங்குவதாக தெரிவித்தாராம்.
இதை நம்பிய முகம்மது ஹாலித், தலைஞாயிறில் உள்ள ஒரு வங்கியிலிருந்து ரூ. 11.40 லட்சமும், திருத்துறைப்பூண்டியில் உள்ள வங்கியிலிருந்து ரூ.3.50 லட்சமும் என மொத்தம் ரூ.15 லட்சம் அனுப்பி வைத்துள்ளாா்.
ஆனால், ஹோகன் மற்றும் ராஜாராம் ஆகியோா் அழகு நிலையம் அமைக்க உரிமம் பெற்றுத்தராமல் ஏமாற்றி வந்தனா். இதுகுறித்து, முகம்மது ஹாலித் அளித்தப் புகாரின் பேரில் நாகை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் சென்னையைச் சோ்ந்த ஜெ. ஹோகன், சு. ராஜாராம், அஸ்ரத் தேவராஜ், ஜீ. நந்தகுமாா், ரா.ஷெல்லி லெதா் ஆகியோா் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.