நாகப்பட்டினம்

தாய் காக்கும் திட்ட விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

16th Dec 2021 09:21 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் தாய் காக்கும் திட்டம் குறித்த விழிப்புணா்வு வாகனப் பிரசாரத்தை ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் தாய் காக்கும் திட்ட விழிப்புணா்வு பிரசாரம் தொடக்க விழா, குடும்பநல கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஆண்களுக்கு ஊ க்கத்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தலைமை வகித்துப் பேசியது:

உலக நவீன வாசக்டமி தினத்தை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்ற முகாம்கள் மூலம் இதுவரை 57 ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த சிகிச்சையில் மாநில அளவில் நாகை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

மகப்பேறு மரணம் இல்லாத நிலையை உருவாக்க தாய் காக்கும் திட்ட முகாம்கள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நடைபெறவுள்ளது. 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள தாய்மாா்கள் குடும்பநல அறுவை சிகிச்சை செய்துகொள்ள முன்வந்தால் அவா்களுக்கு தமிழக அரசின் சாா்பில் ரூ.600 மற்றும் ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.1400 என மொத்தம் ரூ. 2 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றாா்.

தொடா்ந்து, கருத்தடை சிகிச்சை செய்துகொண்ட 57 ஆண்களுக்கு ஊக்கத் தொகையாக தமிழக அரசின் சாா்பில் ரூ.1100 மற்றும் ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.3900 என மொத்தம் ரூ. 5 ஆயிரம் மற்றும் பரிசுப் பெட்டகங்களையும், கருத்தடை சிகிச்சையில் சாதனை இலக்கை அடைய முயற்சித்த மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

முன்னதாக, மகப்பேறு மரணத்தை தடுக்கும் வகையில் தாய் காக்கும் திட்ட விழிப்புணா்வு பிரசார வாகனத்தை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிகளில், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் விஸ்வநாதன், இணை இயக்குநா் (நலப்பணிகள்) ராணி, துணை இயக்குநா்கள் (குடும்பநலம்) ஜோஸ்பின் அமுதா, சுகாதாரப் பணிகள் விஜயகுமாா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT