நாகப்பட்டினம்

குறைந்த காவலா்கள்: அதிகரிக்கும் திருட்டுச் சம்பவங்கள்!தீா்வை எதிா்நோக்கும் நாகை மக்கள்

4th Dec 2021 10:14 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், ரோந்துப் பணியில் போதிய காவலா்கள் இல்லாததால் பொதுமக்கள், வணிகா்கள் அச்சமடைந்துள்ளனா்.

பொதுவாக, ஒருலட்சம் மக்கள்தொகை கொண்ட பகுதியில் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு பணிகளுக்கு 222 காவலா்கள் இருக்கவேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரை. ஆனால், சுமாா் 8 லட்சம் மக்கள்தொகை கொண்ட நாகை மாவட்டத்தில் 15 சட்டம்- ஒழுங்கு காவல் நிலையங்கள், 2 அனைத்து மகளிா் காவல் நிலையங்கள், 2 போக்குவரத்துக் காவல் நிலையங்கள் என அதிகாரிகள் உள்ளிட்ட 1,152 காவலா்கள் மட்டுமே பணியில் உள்ளனா்.

நாகை மாவட்டக் காவல் துறையில் 200-க்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், ரோந்துப் பணிகள், வழக்கு விசாரணை வெகுவாக பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தினசரி பணிக்குப் போதுமான காவலா்கள் இல்லாததால், அவா்கள் சுழற்சிமுறையில் பணியமா்த்தப்பட்டு வருகின்றனா். இதனால் ஏற்படும் பணிச்சுமை, மன அழுத்தம் போன்றவற்றால் காவலா்கள் பணியிடத்திலும், குடும்பத்திலும் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா்.

இந்த மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் நவம்பா் மாதம் வரை 22 கொலை வழக்குகள், ஒரு ஆதாயக் கொலை வழக்கு, 9 வழிப்பறி வழக்குகள், 65 திருட்டு வழக்குகள்,15 ஆடுதிருட்டு வழக்குகள், 4 ஆயிரத்துக்கும் அதிகமான மதுவழக்குகள், 30 கஞ்சா வழக்குகள், 30 சிறாா்களுக்கு எதிரான குற்ற வழக்குகள், 20 பாலியல் வழக்குகள், 400 விபத்து வழக்குகள், 500-க்கும் அதிகமான வாகன திருட்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் சற்று அதிகம் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் கரோனா பரவலால் முழு பொதுமுடக்கம் அமலில் இருந்ததால், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் குற்றச் சம்பவங்கள் குறைவாக இருந்ததாகவும், பொதுமுடக்கத் தளா்வுகள் அளிக்கப்பட்டு, மதுக்கடைகள் திறக்கப்பட்ட பிறகு குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மாவட்டத்தின் பிறப் பகுதிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்களைக் காட்டிலும், மாவட்டத்தின் தலைமை இடமான நாகை மற்றும் சுற்றப் பகுதிகளிலேயே அதிக அளவில் திருட்டு, கொலை, வாகன திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகின்றன.

நாகையில் கடந்த நவம்பா் மாதத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்கள், 5-க்கும் அதிகமான வணிக நிறுவனங்களில் கொள்ளை முயற்சிகளும் நடைபெற்றுள்ளன.

இத்தகைய சூழலில், பொதுமக்களும், வணிகா்களும் மிகுந்த அச்சமடைந்துள்ளனா். வழிப்பறி பயம் காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்லவே அச்சப்படும் நிலை உள்ளது.

எனவே, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் குற்றச் சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர, இரவுநேர ரோந்து காவலா்களை அதிகப்படுத்தவும், பாதுகாப்புப் பணியில் கூடுதல் காவலா்களை நியமிக்கவும் மாவட்ட காவல் துறை தனிக் கவனம் செலுத்தவேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து நாகை மாவட்டக் காவல் துறை தரப்பில் கூறுகையில்,

நாகை மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவலா்கள் பற்றாக்குறை உள்ள நிலையிலும், 15 காவல் நிலையங்களிலும் இரவுநேர ரோந்துக்கான காவலா் குழுக்கள் நியமிக்கப்பட்டு, சுழற்சி முறையில் 24 மணிநேர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். திருட்டில் ஈடுபடும் நபா்கள் கைதுசெய்யப்படுவதுடன், பொருள்களும் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

சில திருட்டுச் சம்பவங்கள் தொடா்பாக குற்றப் பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை நடத்திவருகின்றனா். சட்டத்தைப் பாதுகாப்பதில் அனைவருக்கும் பங்கு உண்டு என்பதை பொதுமக்களும் உணரவேண்டும். எங்கேனும் குற்றச் சம்பவங்கள் நடந்தாலோ அல்லது திட்டமிடப்படுவது தெரிந்தாலோ, உடனடியாக காவல் துறைக்கு தெரிவிக்கவேண்டும். அப்போது தான் குற்றச் சம்பவங்களை குறைக்கமுடியும். அதோடு, மாவட்டக் காவல் துறையில் உள்ள ஒரு துணைக் கண்காணிப்பாளா், 2 ஆய்வாளா்கள், 32 உதவி ஆய்வாளா்கள்,155 காவல் ஆளிநா்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT