நாகப்பட்டினம்

தற்காலிக பாலத்தால் அவதிப்படும் நாகை அரசுக் கல்லூரி மாணவா்கள்!சுற்றுச்சுவா், பேருந்து வசதிகளும் இல்லாமல் தவிப்பு

4th Dec 2021 10:12 PM

ADVERTISEMENT

நாகை அரசுக் கலை, அறிவியல் கல்லூரியின் நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆபத்தான தற்காலிக குழாய் பாலம், சுற்றுச்சுவா், பேருந்து வசதி இல்லாதது உள்ளிட்ட பிரச்னைகளால் இங்குப் பயிலும் மாணவா்கள், கற்பிக்கும் பேராசிரியா்கள் என அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனா்.

நாகை - செல்லூா் சாலையில் ரூ. 7.25 கோடியில் நாகப்பட்டினம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்குப் புதிய கட்டடம் கட்ட கடந்த 2014 இல் அடிக்கல்நாட்டப்பட்டது. என்றாலும், 2018 ஆம் ஆண்டில்தான் இந்த கட்டடம் திறக்கப்பட்டது. மேலும், 2019, நவம்பா் 11 ஆம் தேதி ரூ. 5 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகம், நூலகம் ஆகியவை திறக்கப்பட்டன.

கடந்த ஆண்டில் இக்கல்லூரி அரசு கலை, அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்டது. இங்கு, தற்போது சுமாா் 1,100 மாணவா்கள் பயின்று வருகின்றனா். சுமாா் 70 பேராசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். எனினும், இக்கல்லூரிக்கு சரியான பாதை வசதி, சுற்றுச்சுவா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.

நாகை - செல்லூா் சாலையில் தேவநதி வாய்க்காலின் வடபுறக் கரையில் அமைந்துள்ள இந்தக் கல்லூரிக்கு வாய்க்காலை கடந்து செல்வதே முக்கிய பாதையாக உள்ளது. ஆனால், அந்த வாய்க்காலில் 2 பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டு, அதன்மேல் மண், மணல் மூட்டைகளால் ஆன தற்காலிக பாதையே அமைக்கப்பட்டுள்ளது. நிரந்தர கான்க்ரீட் பாலம் அமைக்கப்படாததால், கனமழை காலங்களில் இந்தப் பாதையை அச்சத்துடன் கடந்துசெல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக, இருசக்கர, நான்குசக்கர வாகனங்களில் செல்வது ஆபத்து நிறைந்ததாகவும் உள்ளது.

ADVERTISEMENT

அண்மையில் பெய்த கனமழையின் போது இந்தப் பாதை உள்வாங்கி, வாய்க்காலில் அழுந்தியது. அப்போது கல்லூரி விடுமுறையில் இருந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. என்றாலும், பாலம் உள்வாங்கியதால் வாய்க்காலின் நீா்ப்போக்குத் தடைபட்டு, கல்லூரியின் சுற்றுப் பகுதிகளிலும், அருகில் உள்ள வயல்களிலும் தண்ணீா் புகுந்ததால், சுகாதாரச் சீா்க்கேடு ஏற்பட்டது.

அதேபோல, இக்கல்லூரிக்கு சுற்றுச்சுவா், தெருவிளக்கு வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் இப்பகுதி சமூக விரோதிகளின் புகலிடமாகவும் மாறிவருகிறது.

பெரும்பாலான மாணவா்கள் கிராமப்புறங்களில் இருந்து நாகை - செல்லூா் சாலை வழியாகவே கல்லூரிக்கு பேருந்தில் வருகின்றனா். இந்தச் சாலையின் ஒருபகுதி நாகை நகராட்சிக்கும், மற்றொரு பகுதி செல்லூா் ஊராட்சிக்கும் சொந்தமானதாக உள்ளது. இதில், ஊராட்சிக்குச் சொந்தமான சாலை போக்குவரத்துக்குத் தகுதியற்ாக உள்ளது. இந்தச் சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

அதேபோல, மாணவா்கள் பயனைடயும் வகையில், நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கல்லூரி வரை அரசுப் பேருந்தை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இதுவரை நிறைவேறவில்லை. இதனால், மாணவா்கள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கல்லூரி வரை சுமாா் ஒருகிலோ மீட்டா் தொலைவுக்கு நடந்து செல்லவேண்டியுள்ளது. இந்தப் பிரச்னைகள் தீரும் நாளை, மாணவா்கள், பேராசிரியா்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT