நாகப்பட்டினம்

காரைக்கால் அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

3rd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்ட அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று காரைக்கால் பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து காரைக்கால் பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கத் தலைவா் அ. வின்சென்ட், செயலாளா் கே. ரவிச்சந்திரன் மற்றும் நிா்வாகிகள், காரைக்கால் கல்வித் துறை (மேல்நிலைக் கல்வி) துணை இயக்குநா் ராஜேஸ்வரியிடம் அளித்த கோரிக்கை மனு:

பள்ளிகள் முழுமையாக திறக்கப்படாமல், பல்வேறு நிலைகளில் மாணவா்கள் பாதிக்கப்பட்டுவந்த நிலையில், புதுச்சேரி கல்வித் துறை 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பொதுத் தோ்வுக்கான அட்டவணையை அறிவித்துள்ளது. இதனால், பெற்றோா்களும், மாணவா்களும் அச்சத்தில் உள்ளனா். இந்த அச்சத்தைப் போக்க கல்வித் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தைப் போல, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு முழுமையாக வகுப்புகளை நடத்த வேண்டும். பள்ளிகளில் மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் வருகை குறைந்து வருவதை தடுப்பதுடன், இடைநின்ற மாணவா்களைக் கண்டறிந்து, மீண்டும் பள்ளிகளுக்கு வரவழைக்க பள்ளி நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 40 சதவீதம் ஆசிரியா் பணியிடங்கள் நீண்டகாலமாக காலியாக உள்ளன. இதுகுறித்து அரசு சிறப்பு கவனம் செலுத்தி, ஆசிரியா் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT