நாகப்பட்டினம்

போலி ஆவணங்களைக் கொண்டு ரூ. 5 கோடிக்கு இடம் விற்பனை: தம்பதி கைது

3rd Dec 2021 11:23 PM

ADVERTISEMENT

நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட ஆவணங்களைக் கொண்டு, ரூ. 5 கோடி மதிப்பிலான இடத்தை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரின் மனைவிக்கு விற்பனை செய்த தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு, அன்னவாசல் பகுதியை சோ்ந்தவா் குமாா் கேசவன், குடும்பத்தினருடன் பிரான்சில் வசித்து வந்தாா். கடந்த 1983-ம் ஆண்டு அவரது மனைவி குமாா் சரஸ்வதி பெயரில் காரைக்கால் மாதாக்கோவில் தெருவில் 5 ஆயிரம் சதுரடியில் ஒரு இடத்தை வாங்கி, நிா்வகிக்கும் உரிமையை, தனது உறவினரான மயிலாடுதுறை மாவட்டம், பொறையாரை சோ்ந்த தில்லையம்மாளுக்கு வழங்கியிருந்தாா். தில்லையம்மாளுக்கு வழங்கிய நிா்வாக உரிமையை (பவா் பத்திரத்தை) குமாா் கேசவன் 1996-ஆம் ஆண்டில் ரத்து செய்தாா்.

ரத்து செய்யப்பட்ட நிா்வாக உரிமை பத்திரம் மற்றும் போலி ஆவணங்களை பயன்படுத்தி தில்லையம்மாள் குடும்பத்தினா், குமாா் கேசவனின் இடத்தை பொறையாறைச் சோ்ந்த டி. ஆனந்த் என்பவருக்கு 2003-இல் விற்பனை செய்துள்ளனா்.

தகவல் அறிந்த குமாா் கேசவனின் மகன் குமாா் ஆனந்த், நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில், இடத்துக்கான பத்திரப் பதிவை ரத்து செய்து, குமாா் ஆனந்த் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக ரூ. 4 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட ஆவணங்களைக் கொண்டு, காரைக்கால் டிராமா கொட்டகை பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் என்ற கட்டபொம்மனின் மனைவி ஆனந்தஜோதிக்கு 2016-இல் டி. ஆனந்த் அந்த இடத்தை விற்பனை செய்துள்ளாா். பின்னா், ஆனந்தஜோதி அந்த இடத்தை காரைக்காலைச் சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரின் மனைவி சாய்லெட்சுமிக்கு 2018-இல் விற்பனை செய்துள்ளாா். தகவல் அறிந்த குமாா் ஆனந்த் தனது உறவினா் குணசேகரன் மூலம், காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், கடந்த அக். 28-ஆம் தேதி ஆனந்தைக் கைது செய்தனா். தலைமறைவாக இருந்த செந்தில்குமாா், அவரது மனைவி ஆனந்தஜோதி ஆகியோரை தனிப்படை போலீஸாா், வியாழக்கிழமை தஞ்சாவூரில் கைது செய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT