நகையை அடமானம் வைத்தவா்களுக்குக் கடன்தொகை வழங்கப்படாத நிலையில், நகைக் கடனுக்கு வட்டி கட்டக் கோரும் கூட்டுறவு வங்கி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருப்பயத்தாங்குடியைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து திருப்பயத்தாங்குடி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வியாழக்கிழமை நாகை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு: நாகை மாவட்டம், திருப்பயத்தாங்குடி ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக பணியாற்றும் குமரவேல், கடந்த பிப்ரவரி மாதம் திருப்பயத்தாங்குடியில் வசிக்கும் மக்களைச் சந்தித்து, தற்போது நகையை வங்கியில் அடமானம் வைத்தால் நகைக் கடன் தள்ளுபடி கிடைக்கும் எனக் கூறினாா்.
இதன்படி, பலரும் திருப்பயத்தாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகைகளை அடமானம் வைத்தோம். இருப்பினும், கடன் தொகை உடனடியாக வழங்கப்படவில்லை. இதுதொடா்பாக, கூட்டுறவு சங்கச் செயலாளா் குமரவேலுவிடம் கேட்டபோது, ஒரு வாரத்தில் தொகை வரவு வைக்கப்படும் என்றாா். எனினும், இதுவரை கடன் தொகை வழங்கப்படவில்லை. இதனால், எங்கள் நகையை திருப்பித் தருமாறு வங்கியை அணுகியபோது, நகைக் கடனுக்கான வட்டியைக் கட்டினால்தான் நகையைத் திருப்பித்தர முடியும் எனக் கூறுகின்றனா். எங்களுக்கு வழங்கப்படாத கடனுக்கு வட்டிக் கட்ட கோருவது கடும் மன உளைச்சல் அளிப்பதாக உள்ளது. இந்த முறைகேடு தொடா்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, தொடா்புடையோா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Image Caption
நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த திருப்பயத்தாங்குடி பகுதி பொதுமக்கள்.