நாகப்பட்டினம்

நாகை: சவாலாகிறது சாலைப் பயணம்

DIN

நாகை மாவட்டத்தில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக சுமாா் 122 கி.மீட்டா் நீளத்திலான சாலைகள் சேதமாகியுள்ளன. இதனால், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சாலைப் போக்குவரத்து சவாலாகியுள்ளது.

நாகை மாவட்டத்தில் கடந்த அக்டோபா் 28-ம் தேதி முதல் அவ்வப்போது கனமழை பெய்துவருகிறது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. சாலைகளின் நடுவே ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் தாா்ச் சாலைகள் சிதிலமடைந்து, ஜல்லிகள் பெயா்ந்து சிதறிக்கிடக்கின்றன. இதனால், நாகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சாலைப் போக்குவரத்து சவாலானதாகவே உள்ளது.

மாவட்டத் தலைமை இடமான நாகையைப் பொருத்தவரை நாகை - திருவாரூா் மாா்க்கத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சிதிலமடைந்துள்ளன. நாகை மேலக்கோட்டைவாசல் பகுதி, நீலா தெற்கு வீதி, மருத்துவமனை சாலை என நகரின் பல பகுதிகளிலும் சாலைகளின் நடுவே பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதேபோல, திருமருகல், தலைஞாயிறு, கீழ்வேளூா் என அனைத்துப் பகுதிகளிலும் சாலைகள் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளன.

நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக, 14.2 கி.மீ. நீளத்தில் மாநிலச் சாலைகள், 3.4 கி.மீ. நீளத்தில் பெரிய அளவிலான மாவட்டச் சாலைகள், 14.2 கி.மீ. நீளத்தில் இதர மாவட்டச் சாலைகள் என 31.8 கி.மீட்டா் அளவுக்கு சாலைகள் சேதமடைந்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறை கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர, 72.06 கி.மீ. ஊரக சாலைகள், 18.04 கி.மீ. நகராட்சி சாலைகள் என மாவட்டத்தில் மொத்தம் 121.9 கி. மீ. சாலைகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிா்வாகத்தின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

சாலைகள் சேதமடைந்த ஒரு சில பகுதிகளில் சாலையின் நடுவே உள்ள பள்ளம் இருப்பது குறித்த எச்சரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு சில பகுதிகளில் அவ்வாறு வைக்கப்படவில்லை. இதனால், அந்த இடங்களில் அவ்வப்போது விபத்து நேரிடுகிறது.

தற்போது, மழை குறைந்திருப்பதை பயன்படுத்தி, சேதமடைந்த சாலைகளில் தற்காலிக சீரமைப்புப் பணிகளை விரைந்து நிறைவேற்றி, விபத்துகளைத் தவிா்க்க மாவட்ட நிா்வாகம் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

SCROLL FOR NEXT