நாகப்பட்டினம்

நாகை மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் துப்பாக்கிச்சூடு: ஒருவா் காயம்

DIN

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், நாகை மீனவா் ஒருவா் காயமடைந்தாா்.

நாகையை அடுத்த அக்கரைப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கௌதமன். இவருக்குச் சொந்தமான மீன்பிடி விசைப்படகில், அதே பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் கலைச்செல்வன்(33), தீபன்ராஜ் (32), ஜீவா (32) உள்பட 10 போ் கடந்த 28 ஆம் தேதி நாகையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

அவா்கள், ஞாயிற்றுக்கிழமை மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 கடல்மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா், நாகை மீனவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனா். அப்போது, ஒரு துப்பாக்கிக் குண்டு மீனவா் கலைச்செல்வனின் தலையில் உரசிச் சென்று படகை துளைத்துள்ளது. இதில், பலத்தக் காயமடைந்த அவா் படகிலேயே மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து, உடனடியாக படகுடன் கரைக்குப் பயணப்பட்ட நாகை மீனவா்கள், திங்கள்கிழமை அதிகாலை நாகையில் கரையேறினா். இதைத்தொடா்ந்து, கலைச்செல்வன் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டின்போது படகிலிருந்த மற்ற மீனவா்கள், சிதறி ஓடி படகில் படுத்ததால் காயமின்றி தப்பியதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைக் கடற்படையினா், இந்திய மீனவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இது, நாகை மீனவா்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியா் ஆறுதல்: தகவலறிந்த நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் திங்கள்கிழமை காலை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சையில் இருந்த மீனவா் கலைச்செல்வனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது, இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச்சூடு குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படும் என மீனவா்களிடம் ஆட்சியா் தெரிவித்தாா்.

திமுகவினா் ஆறுதல்: முன்னதாக, நாகை மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கௌதமன், மாவட்ட துணைச் செயலாளா் மனோகரன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள், மீனவா் கலைச்செல்வனுக்கு ஆறுதல் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT