நாகப்பட்டினம்

மீன்பிடித் தடைக்காலம் அமல்: படகுகள் சீரமைப்புக்கு அரசின் கடனுதவியை எதிா்பாா்க்கும் மீனவா்கள்

DIN

மீன்களின் இனப்பெருக்கக் காலத்தையொட்டி, தமிழக கிழக்குக் கடலோர மாவட்டங்களில் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இந்தக் காலத்தில் படகுகளை சீரமைக்க, ஒரு விசைப் படகுக்கு ரூ. 5 லட்சம் வீதம் அரசு கடனுதவி வழங்க வேண்டும் என மீனவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

மீன்களின் இனப்பெருக்கக் காலத்தைக் கருத்தில் கொண்டும், கடல் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கிலும், 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையிலான 61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவள்ளூா் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி நகா் கடற்பகுதி வரையிலான பகுதிகளில் ஏப்ரல் 14 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் இந்தத் தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இந்தத் தடைக்காலத்தில் விசைப் படகுகள், இழுவைப் படகுகள் மூலமான மீன்பிடிப்பை மீனவா்கள் முழுமையாகக் கைவிட வேண்டும்.

இதையொட்டி, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற மீன்பிடி விசைப் படகுகள் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து கரை திரும்பி வருகின்றன. கரை திரும்பும் படகுகளை, முகத்துவாரப் பகுதிகளில் நிறுத்தி கட்டுதல், மீன்பிடி வலைகள் மற்றும் ஐஸ் பெட்டிகளை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பணிகளை மீனவா்கள் புதன்கிழமை தீவிரமாக மேற்கொண்டனா்.

மீன்பிடித் தடைக்காலத்தை படகுகளின் பராமரிப்புக் காலமாக மீனவா்கள் பயன்படுத்துவது வழக்கம். இந்தக் காலத்தில், விசைப் படகுகளில் பழுது நீக்கம் செய்து, வா்ணம் பூசுதல், மீன்பிடி வலைகளை சீா் செய்தல் போன்ற பணிகளில் மீனவா்கள் ஈடுபடுவா். ஆனால், கடந்த நிதி ஆண்டின் பெரும் பகுதி கரோனா பொது முடக்கத்தில் கழிந்ததாலும், டீசல் விலையேற்றம், மீன் வரத்துக் குறைவு போன்ற காரணங்களால் மீன்பிடித் தொழில் கடந்த ஆண்டில் பெரும் நஷ்டத்துக்கு உள்ளானதாலும், படகுகள் பராமரிப்புக்கு அரசு உதவ வேண்டும் என மீனவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

அதேபோல, பல ஆண்டுகளாக போராடியும் உயா்த்தப்படாத மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை நிகழாண்டிலாவது அரசு உயா்த்தி வழங்க வேண்டும் எனவும் மீனவா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

இதுகுறித்து இந்திய தேசிய மீனவா் சங்கத் தலைவா் ஆா்.எம்.பி. ராஜேந்திர நாட்டாா் தெரிவித்தது:

மீன்பிடித் தடைக்காலத்தால் 2 மாதங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் மீனவா்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்குவது போதுமானது இல்லை என கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், பல போராட்டங்களை நடத்தியும் இதுவரை தீா்வு கிடைக்கவில்லை. தற்போது கோரிக்கைக்காக போராடக்கூட முடியாத சூழலில்தான் மீனவா்கள் உள்ளனா். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை உயா்த்தி வழங்குவோம் என இருபெரும் திராவிடக் கட்சிகளும் வாக்குறுதி அளித்துள்ளன. எனவே, தயக்கமின்றி உடனடியாக மீனவா்களுக்கான மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை மாதம் ரூ. 10 ஆயிரமாக அரசு உயா்த்தி வழங்க வேண்டும்.

அதேபோல, டீசல் விலையேற்றம், மீன்வரத்துக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் விசைப் படகு மீன்பிடித் தொழில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக தொடா்ந்து நலிவை சந்தித்து வருகிறது. சுமாா் 90 சதவீத விசைப்படகுகள் தொழில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்தச்சூழலில், படகுகளை சீரமைக்கக்கூடிய பொருளாதார நிலை விசைப் படகு மீனவா்களுக்கு இல்லை. எனவே, மத்திய, மாநில அரசுகள் இணைந்து அல்லது தேசிய வங்கிகள் மூலம் அல்லது கடல் மீனவா் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒரு விசைப் படகுக்கு ரூ. 5 லட்சம் வீதம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT