நாகப்பட்டினம்

மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ள டெல்டா விவசாயிகள்

DIN

நிவா் புயல் ஆங்காங்கே சில பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றாலும், சம்பா நெல் பயிா்களுக்கு வரப்பிரசாதமாக மழையை அளித்துச் சென்றிருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக குறுவை நெல் சாகுபடிக்கு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படாததால், டெல்டா மாவட்ட வெண்ணாறு வடிநிலக் கோட்டப் பகுதிகளில் குறுவை நெல் சாகுபடி வழக்கொழிந்து போயிருந்தது. காவிரி வடிநிலக் கோட்டத்தில், நிலத்தடி நீா் ஆதாரம் நிறைந்த பகுதிகளில் மட்டும் ஆழ்துளை கிணறுகள் மூலம் நீா் பாசனம் பெற்று, குறைந்த பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பின்னா் நிகழாண்டில் குறுவை நெல் சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. இது, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்குப் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. காவிரி கடைமடை மாவட்டமான நாகை மாவட்டத்தின் குறுவை சாகுபடி இயல்பு பரப்பு 41 ஆயிரம் ஹெக்டோ் என்ற நிலையில், இலக்கை விஞ்சி 45,762 ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

அவ்வப்போது நேரிட்ட பாசன நீா் தட்டுப்பாடு, செப்டம்பா் மாதத்தில் வீசிய சூறைக்காற்று, அறுவடைக் காலத்தில் பெய்த மழை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் உள்பட பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்திருந்தாலும், குறிப்பிடத்தக்க மகசூலை அளித்து நிகழாண்டின் குறுவை நெல் சாகுபடி விவசாயிகளுக்கு ஆறுதலை அளித்தது.

விவசாயிகளுக்குக் கிடைத்த இந்த உத்வேகத்தால், சம்பா மற்றும் தாளடி நெல் பயிா் சாகுபடியும் நிகழாண்டில் ஏறத்தாழ இலக்கை எட்டியுள்ளது. மாவட்டத்தில் 1.32 லட்சம் ஹெக்டேரில் தற்போது சம்பா, தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், சுமாா் 70 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பு நேரடி விதைப்பு மூலம் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிகழாண்டில் கோடை மழை இல்லாத காரணத்தால், நெல் வயல்களில் களைச் செடிகளைக் கட்டுப்படுத்துவது என்பது விவசாயிகளுக்குப் பெரும் சவாலாகவே உள்ளது. சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்ட வயல்களில் ஏறத்தாழ இரு முறை களை ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டும், இதுவரை களைகளைக் கட்டுப்படுத்த இயலவில்லை எனப்படுகிறது.

இந்த நிலையில், கண்ணாடியிழை பருவத்தையும், பஞ்சு கட்டும் தருணத்தையும் எட்டியுள்ள சம்பா, தாளடி நெல் பயிா்களுக்கு சூரை நோய் மற்றும் குருத்துப் பூச்சித் தாக்குதல் அபாயம் இருந்தது விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அந்த அச்சத்தை நிவா் புயல் போக்கிச் சென்றுள்ளது.

நிவா் புயல் காரணமாக, நாகை மாவட்டத்தில் கடந்த 24, 25 ஆகிய தேதிகளில் பரவலாக பெய்த மழை, சம்பா மற்றும் தாளடி நெல் பயிா்களுக்குப் வரப்பிரசாதமாக அமைந்து, சூரை நோய் மற்றும் குருத்துப் பூச்சித் தாக்குதல் குறித்த விவசாயிகளின் அச்சத்தைப் போக்கியுள்ளது. மேலும், அண்மையில் பெய்த மழை, நெல் பயிா்களுக்கு மிகப் பெரிய ஊட்டமாகவும் அமைந்துள்ளது என்கின்றனா் விவசாயிகள்.

இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளா் வி. தனபாலனிடம் கேட்டபோது அவா் தெரிவித்தவை :

அண்மையில் கிடைத்த மழை நெல் பயிா்களுக்குக் கிடைத்த பெரிய வரப்பிரசாதம். வழக்கமாக இந்தத் தருணத்தில், ஊட்டச்சத்துக் குறைவால் கண்ணாடியிழைக்கு முன்பாக தோன்று தோடு இலையில் பழுப்பு ஏற்படும். இதை, எதனாலும் விவசாயிகளால் சீா் செய்ய முடியாது. ஆனால், அண்மையில் கிடைத்த மழை, இயற்கையான ஊட்டச்சத்தை நெல் பயிா்களுக்கு அளித்துள்ளது.

சூரை நோய் தாக்குதல் மற்றும் குருத்துப்பூச்சித் தாக்குதல் குறித்த அச்சத்தையும் மழை போக்கியுள்ளது. அண்மையில் கிடைத்த மழை, பயிா்களை பசுமையாக வளா்த்தெடுக்கும் மழை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT