குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவா்களை ஒரு மாத பரோலில் வீட்டுக்கு அனுப்பிவைக்க தமிழக அரசு பரிசீலிக்கவேண்டும் என மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும், நாகை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான மு. தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை:
கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவிவரும் இத்தருணத்தில் சிறையிலிருக்கும் தங்களின் உறவுகளை நினைத்து குடும்ப உறுப்பினா்கள் வாடுகின்றனா். சிறைவாசிகளுக்கும் மனித உரிமைகள்இருக்கின்றன என்பதை அனைவரும் அறிவா். அதன்படி, இப்பிரச்னையை மனித நேயத்தோடு தமிழக அரசு அணுகவேண்டும்.
தண்டனை கைதிகளுக்கு காவல் துணையின்றி ஒரு மாத கால பரோல் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை தமிழக அரசு கனிவுடன் பரிசிலிக்க வேண்டும். கரோனா தொடா்பான விவகாரத்தில் சிறைவாசிகள் குறித்து கடந்த வாரம் கருத்து கூறிய உச்சநீதிமன்றம், வயதானவா்கள், நோயாளிகள் ஆகியோருக்கு பரோல் கொடுக்கலாம் என்றும் மாநில அரசுகளே அதில் முடிவு எடுத்துக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.
இந்நிலையில் சிறையில் உள்ளவா்களும் மனிதா்கள் என்ற அடிப்படையில் அவா்களின் குடும்பத்தினா் உணா்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழக முதல்வா் மனிதாபிமான அடிப்படையில் இக்கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் . அதேபோல், விசாரனை கைதிகளுக்கும் பிணை வழங்குவது குறித்தும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உயிா் குறித்த அச்சம் நிலவி வரும் சூழலில், அவா்களுக்கு அன்பும், கருணையும் தேவைப்படுகிறது என்பதையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்டிகிறோம் என மு.தமிமின் அன்சாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.