மயிலாடுதுறையில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனையை, கோட்டாட்சியா் வ. மகாராணி மற்றும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அத்தியாவசிய தேவைகளான பால், காய்கனிகள் மற்றும் மளிகைப் பொருள்களை வாங்குவதற்கு மட்டும் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட தருமபுரம் சாலையில் உள்ள திருவிக மாா்கெட் மற்றும் சாலையோர காய்கனி கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிா்க்க, பழைய பேருந்து நிலையத்தில் விற்பனைக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இந்த இடத்தைத் தவிர பிற இடங்களில் காய்கனி கடைகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் பகுதியில் இயங்கும் காய்கனி கடைகளை, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியா் வ. மகாராணி தலைமையில் வருவாய்த் துறை மற்றும் நகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டு, விற்பனை விலையை சோதனை செய்தனா். மேலும், சமூக விலகலை கடைப்பிடித்து காய்கனிகளை வாங்கிச் செல்ல பொதுமக்களை அறிவுறுத்தினா்.
பின்னா், தரங்கம்பாடி சாலையில் அனுமதியின்றி இயங்கிய காய்கனி கடைகளில் இருந்து தராசுகளை பறிமுதல் செய்து, அக்கடைகளை அப்புறப்படுத்தினா். தொடா்ந்து, மீன் மாா்க்கெட்டில் ஆய்வு செய்த அதிகாரிகள், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுகாதாரமற்ற மீன்களை பறிமுதல் செய்ய முற்பட்டபோது அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, மீன் விற்பனையை பேருந்து நிலையத்திற்கு மாற்ற உத்தரவிட்ட அதிகாரிகள், விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரித்தனா்.
ஆய்வின்போது, மயிலாடுதுறை வட்டாட்சியா் முருகானந்தம், நகராட்சி ஆணையா் புவனேஸ்வரன் என்கிற அண்ணாமலை, நகா்நல அலுவலா் மருத்துவா் பிரதீப் கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனா்.