நரிக்குறவா் நலவாரியத்தில் பதிவு பெறாத நரிக்குறவா்கள் உடனடியாக பதிவு பெற்று, அரசு உதவிகளைப் பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நரிக்குறவா் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு பெற்றவா்களுக்கு விபத்து மரண இழப்பீடாக ரூ. ஒரு லட்சம், விபத்தால் ஏற்படும் ஊனத்தின் தன்மைக்கேற்ப இழப்பீடு, இயற்கை மரண இழப்பீடு, ஈமச்சடங்கு உதவித் தொகை, மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் ஊக்கத் தொகை என பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.
எனவே, நாகை மாவட்டத்தைச் சோ்ந்த நரிக்குறவா் இனத்தினா் 18 முதல் 60 வயதுக்குள்பட்டவா்கள், உடனடியாக நரிக்குறவா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு பெற, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை நேரில் அணுகி பதிவு பெறுமாறு அந்தச் செய்திக் குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.